சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

🕔 March 16, 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

ஹாதியா தொடர்பான வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணை வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சஹ்ரான் ஹாசிமுடைய தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் மனைவி ஹாதியா உள்ளிட்ட குழுவினர் மறைந்திருந்த போது, அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றி வளைத்ததால், உயிரை மாய்துக் கொள்ளும் வகையில் அவர்கள் குண்டை வெடிக்கச் செய்தனர்.

26 ஏப்ரல் 2019 அன்று நடந்த அந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்த போதும், சஹ்ரானின் மனைவி ஹாதியாவும் (அப்போது அவருக்கு 28 வயது) அவரின் பெண் குழந்தை ருசைதா (அப்போது 04 வயது) உயிர் தப்பினர்.

இதனையடுத்து அவர்களை காப்பாற்றிய ராணுவத்தினர், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உடல் நிலை தேறிய பின்னர் – பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சஹ்ரானின் மனைவி ஹாதியா கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கைப்பட்டார். இந்த நிலையிலேயே ஹாதியாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஹாதியா சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் நேற்றைய தினம் ஆஜராகினர்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தினார்.

ஹாதியா ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் நேற்று மன்றில் ஆட்சேபனைகளை முன்வைத்த அவரின் சட்டத்தரணிகள், நீண்ட நேர சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

மேலும் ஹாதியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் , அவை தொடர்பில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் போன்றவை தொடர்பிலும் அவரின் சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

அதேவேளை இந்த வழக்கில் ஹாதியாவுக்கு பிணை வழங்குமாறு அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் 25 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவித்தது.

இருந்தபோதும் ஹாதியா மற்றும் அவருக்கான பிணையாளர்கள் வெளிநாடு செல்லவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் ஆஜராகி ஹாதியா கையொப்பமிட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் நடந்த தாக்குதல்

2019 ஏப்ரல் 21ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து – சஹ்ரான் ஹாஸிம் தலைமையிலான பயங்கரவாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதனையடுத்து சஹ்ரானின் குடும்பத்தவர்களும் அவரின் குழுவினரும் சாய்ந்தமருது பொலிவேரியன் – சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தனர்.

குண்டு வெடிப்பு நடந்த சாய்ந்தமருது வீட்டின் உட்புறம்

அப்போது அவர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட அந்தப் பகுதி மக்கள், பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியமையினை அடுத்து, அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அதன் காரணமாக அவர்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் வகையில் குண்டை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் அந்த வீட்டில் இருந்த சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா, சஹ்ரானின் பெண் குழந்தை ருசைதா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த குண்டு வெடிப்பில் சஹ்ரானின் ஆண் குழந்தை (வாசீட்) பலியானமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரானின் தந்தை ஹயாத்து முகம்மது ஹாசிம், சஹ்ரானின் தாய் சித்தி உம்மா, சஹ்ரானின் சகோரர் றிழ்வான், அவரின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள், சஹ்ரானின் மற்றொரு சகோதரரான ஜெய்னி, அவரின் மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள், சஹ்ரானின் சகோதரி, அவரின் கணவர், மட்டக்களப்பு சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதல்தாரி ஆஸாத் என்பவரின் மனைவி பெரோஸா, தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் நியாஸ் ஆகியோரும் அடையாளம் காணப்படாத ஒருவரும் சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியாகினர்.

அந்த சம்பவத்தில், நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலய தற்கொலைத் தாக்குதல்தாரி முஹமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி மகேந்திரன் புலஸ்தினி அல்லது சாரா ஜெஸ்மி என்பவரும் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், பின்னர் அவர் அந்த அதன்போது மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி ஹாதியா குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயங்களுடன் உயிர் பிழைத்த சஹ்ரானின் பெண் குழந்தை – அவரின் மனைவி ஹாதியாவின் பெற்றோரிடம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க 2019 செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்