சுற்றுலாத் துறையில் முன்னேற்றம்: பெப்ரவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

🕔 February 27, 2023

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டாவது மாதத்திலும் 01 லட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 26ஆம் திகதி வரையில் 100,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர்.

ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் 82,327 பயணிகளும், பெப்ரவரி மாதம் 96,507 பேரும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்.

“பெப்ரவரி மாதம் 26 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இலங்கையை முன்னேற்றுவதற்கு கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கைக்கு எதிராக பல பயண கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை நீக்குவதற்கு நாங்கள் கடுமையாக உழைத்தோம். சுற்றுலாப் பயணிகளுடன் மீண்டும் இலங்கைக்கு விமான நிறுவனங்களைத் பயணிக்கச் செய்தோம். சுற்றுலாத் துறையினருக்கும் எங்கள் அதிகாரிகளுக்கும் தொழில்துறையை புத்துயிர் பெற அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் எதிர்வரும் வாரங்களில் வெளிநாடுகளில் பல சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்