தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மு.கா சார்பில் போட்டி: ‘கனவுத் தவிசாளர்’களின் நிலை என்ன?

– அஹமட் –

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்ற வேண்டுமாயின் உதுமாலெப்பையை களமிறக்க வேண்டும் என, வேட்பாளர் தெரிவு தொடர்பில் – ஹக்கீம் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் மு.கா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மு.கா தலைவரும் இதனை விரும்புவதாக அறிய முடிகிறது.

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, அவரின் ஆரம்ப கால அரசியலின்போது, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராகப் பதவி வகித்தவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

கனவுத் தவிசாளர்களுக்கு பேரிடி

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டியிட்டு, சிலவேளை – சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமாயின், உதுமாலெப்பைக்கே தவிசாளர் பதவி வழங்கப்படும். அந்நிலைமையானது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு தவிசாளராக வேண்டுமென கனவு கண்டு வந்த மு.காங்கிரஸ்காரர்கள் சிலருக்கு பேரிடியாக அமையும்.

எனவே, அவ்வாறான கனவுடவுடன் உள்ளவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில், தம்முடன் உதுமாலெப்பை போட்டியிடுவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதையும் தாண்டி உதுமாலெப்பை போட்டியிடும் போது, தங்களால் முடிந்தளவு உதுமாலெப்பைக்கு மேற்படி ‘கனவுத் தவிசாளர்’கள் குழி பறிக்க முயற்சிப்பார்கள்.

இந்த நிலைமையானது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில், மு.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குள் உட்கட்சி அல்லது குழுச் சண்டைகளை உருவாக்கும்.

அவ்வாறான சூழ்நிலையானது எதிர்க்கட்சிகளுக்கு வாசியாக அமைந்து விடும்.