
– அஹமட் –
அட்டாளைச்சேனையிலுள்ள அரச நிறுவனமொன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த – சில தளபாடங்கள் மாயமாய் மறைந்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு அங்கிருந்து காணாமல் போன சில தளபாடங்கள், அந்த நிறுவனத்தின் தலைவர் நடத்தி வரும் – வர்த்தக நிலையமொன்றில் காணப்படுவதாக, குறித்த அரச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திலிருந்து காணாமல்போன தளபாடங்களை, அந்த நிறுவனத்தின் தலைவரே, அலுவல நேரத்துக்கு முன்னர் காலை வேளையில், வாகனமொன்றில் ஏற்றி அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஒலுவில் பிரதேசத்தில் – குறித்த நிறுவனத்தின் தலைவர் அண்மையில் மேற்படி வர்த்தக நிலையத்தை திறந்ததோடு, அவர் பணியாற்றும் அரச நிறுவனத்தின் நிகழ்வுகளில், அந்த வர்த்தக நிலையத்துக்கான விளம்பரங்களையும் பகிரங்கமாக செய்து வந்துள்ளார்.
இதேவேளை, அந்த வர்த்தக நிலையத்தின் கிளையொன்று, மேற்படி அரச நிறுவனத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.
அரச நிறுவனமொன்றில் சிற்றுண்டிச்சாலையொன்றை தொடங்குவதற்கான அலுவலக ரீதியான ஒழுங்கு விதிகள் எவற்றினையும் பின்பற்றாமல் – மேற்படி நிறுவனத் தலைவர், தனது வர்த்தக நிறுவனத்தின் கிளையை மேற்படி அரச நிறுவனத்தில் ஆரம்பித்திருந்தார்.
இந்த அரச நிறுவனத்தில் இடம்பெறும் பல்வேறு பிழைகள் மற்றும் மோசடிகள் குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவரிடம், தனிப்பட்ட ரீதியாகவும் ஊடகவியலாளர்கள் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த அரச நிறுவனத்தில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய – குறித்த நிறுவனத் தலைவர், ஊடகவியலாளர்களை மிகவும் தரக் குறைவாகவும், அநாகரீகமாகவும் குறிப்பிட்டுப் பேசியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.



