உள்ளூராட்சி தேர்தலை நடத்துவவதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்கு எடுத்துள்ள தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேர்னல் (ஓய்வு) டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியான நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளமை, பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், வரவு செலவுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘வருவாய் பெறுதல் மற்றும் கடன் வாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே அது அமையும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது தேவையற்ற செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாகவும், அரசியல் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களினால் சீர்குலைக்கும் காரணிகள் இருப்பதாகவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: வேட்புமனு திகதி அறிவிப்பு நாளை வெளியாகும்: மார்ச் 15க்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்