நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள் 03 பகுதிகளில் பதிவு

🕔 December 28, 2022

ந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 497 கொலைகளாகும். அதில் 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக மேற்கொள்ளப்பட்டவை என, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

37% குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 09% சப்ரகமுவ மாகாணத்திலும், 08% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 11 மாதங்களில் மட்டும் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டு வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் (39%) பதிவாகியுள்ளன, கொள்ளை சம்பவங்களில் 14% வடமேல் மாகாணத்திலும், தென் மாகாணத்தில் 13 வீதமும் பதிவாகியுள்ளன.

இந்த வருடத்தில் களனி பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 ஆக உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட பொலிஸ் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 3,596 கடத்தல் குற்றங்கள் நடந்துள்ளன. வீடு உடைத்தல் குற்றங்கள் 6,208, கொள்ளைச் சம்பவங்கள் 2,159 பதிவாகியுள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில்கொடூரமான குற்றச் செயல்களின் எண்ணிக்கை 4,336 ஆல் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் 31,098 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் அந்தத் தொகை 35,434 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வருடத்தின் முழுமையான அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்