‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர்: காலம் குயில்களாக, உங்கள் பெயர் சொல்லிக் கூவும்

🕔 December 28, 2022

அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, இவ்வருட இறுதியில் ஓய்வுபெறுகிறார். அதனை முன்னிட்டு, இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது

– எம்.எஸ்.எம். பைறூஸ் –

ஸ்ஸாலி சேர் அண்ணார்ந்து பார்க்கும் ஓர் இமாலயம். பதவிகளால் உயர்ந்தவர்கள் அண்ணார்ந்து பார்க்கப்பட கூடியவர்கள் என்றால் உலகில் ஏராளம்பேர் சிலை வடிக்கப்பட்டிருப்பர். நற்பழக்கங்களாலும் பண்புகளாலும் பின்னப்பட்டவர்கள் – உயர் பதவிகளை வகிக்கும் போது தான், அவர்கள் சிலைகளாகவோ சரித்திரங்களாகவோ மாறிவிடுகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நதிமூலம் இருக்கும். எல்லாவற்றிற்கும் நல்லடித்தளம் வேண்டும்.

பரன்பரை

சின்னலெப்பை பொலிஸ் விதானையின் தோன்றலில் வழிவந்த முகமது அப்துல் காதர், (மூத்தம்பி ஹாஜியார்) ஆசியா உம்மா தம்பதியினருக்கு ஐந்தாவதும் கடைசி மகனாகவும் 1962.01.16 இல் இவர் பிறந்தார். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடனும் பிறந்த இவர் சிறுவயதிலே ஒழுக்க சீலராகவும் மார்க்கத்திலும் கல்வியிலும் துடிப்புடன் செயற்பட்டார்.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்” என்கிறது திருக்குறள்.

நிலம் சரியாக வாய்க்கிறபோதுதான் அதில் போடப்படும் விதை ஆரோக்கியமாக வரும். குலம் வாய்க்கிறபோதுதான் நல்ல வார்த்தைகள் வெளிவரும். அப்படித்தான் இவர் பேசுகிறபோது உள்ளாற இரக்கமும் நியாயமும் அடங்கலான இறுக்கமான பேச்சாக அமைந்திருக்கும். ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’.

கல்விப்பாதை

கஸ்ஸாலி சேர் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அல் – முனீரா பெண்கள் உயர் கல்லூரியிலும் இடைநிலை மற்றும் உயர்தர கல்வியை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியையும் மேற்கொண்டார்.1990 இல் ஆசிரியர் நியமனம் பெற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அல்-அர்ஹம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது சிறப்பான கற்பித்தல் பணியை மேற்கொண்டார்.

அதிபராக பதவி உயர்வு பெற்ற கஸ்ஸாலி சேர், அட்டாளைச்சேனை இக்ரஹ் வித்யாலயம், அந்நூர் மகா வித்தியாலயம், அறபா வித்யாலயம், தேசிய பாடசாலை முதலான பாடசாலைகளில் அதிபராக பணி புரிந்தார். இவருடைய அதிபர் சேவையில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் வரலாறு காணாத எழுச்சி பெற்றது. அந்நூர் மகா வித்தியாலயத்தின் வரலாறுகள் பற்றி சிலாகிக்கப்படும் போதெல்லாம் கஸ்ஸாலி சேரின் நாமம் உச்சத்திலி ருக்கும்.

வாழ்வின் எல்லா நிலைகளிலும் உயர்வு கண்ட கஸ்ஸாலி சேர், கோட்டக்கல்வி பணிப்பாளராக 2012 முதல் 2022 இன் இறுதி வரை சுமார் 10 வருடகாலம் – அரும் பணி செய்தார். பாடவிதான மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் அட்டாளைச்சேனைக் கோட்டத்தை தேசிய ரீதியில் பேசச் செய்தார். கோட்டக் கல்வி பணிப்பாளராக பணியாற்றிய காலம் – அட்டாளைச்சேனை கல்வி வரலாற்றில் பொற்காலமெனலாம்.

அட்டாளைச்சேனைக் கோட்டமானது, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் என்ற மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. இவற்றைத் தாங்கியதாக ஆளுகை செய்யும்போது, தன் மீது சுமக்க முடியாத சுமையொன்று சுமத்தப்பட்டிருப்பதாகவே எல்லோரும் உணர்வர். அவற்றை மறுதலிப்பதாக இறங்கி – சேவை செய்து, சில வேளைகளில் ஆசிரியராகவும் சில வேளைகளில் அதிபராகவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் பணி செய்த கஸ்ஸாலி சேர், உண்மையில் ஒரு நிருவாக மகான்தான்

அகமும் புறமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இவரது புறத்தைப் போலவே அகமும் சீராக வாய்த்திருந்தது.

நிருவாகி

தன் சேவைக் காலத்தில் இவருக்கு எதிரான குரல்கள் குறைந்தே ஒலித்தன. எல்லா பாடசாலைகளையும் ஒருசேர – தன் மனக் கண்ணில் பதித்திருந்தவர் இவர். ஆசிரியராக கடமை செய்த காலத்தில் கற்பித்தலிலும் அதிபர் சேவை காலத்தில் நிருவாகத்திலும் கோட்டக்கல்வி பணிப்பாளராக சேவை செய்த காலத்தில் மேன்நிலை நிருவாகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு இன்று கல்வியை சுமந்து கொண்டிருக்கின்ற – இவர் காலத்து மாணவர்கள் சாட்சி.

அடங்க மறுக்கிற ஆசிரியனையும் ‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர். “அட்டாளைச்சேனை மண்முழுக்க, நீங்கள் விதைத்த கல்வி விதைகள் – விருட்சங்களாக வளர்கிற போது, காலம், உங்கள் பெயர் சொல்லி – குயில்களாக கூவும்”.

இடைவெளிகள் ஒவ்வொன்றையும் – காலம் தன் நாட்கள் எனும் பேனா கொண்டு நிரப்பி விடும். காலம் கடந்துதான் போகும் என்பதெல்லாம் நிதர்சனம் என்ற போதும், கஸ்ஸாலி சேரின் ஓய்வு எனும் இடைவெளி நிரப்பப்படுவதற்கு வெகு காலம் எடுக்கும்.

ஒவ்வொரு மனமும் தத்தமக்கான வெவ்வேறு தேவைகளின் போதும் கஸ்ஸாலி சேரை ஒப்பிட்டு நினைத்து மகிழாமல் கடக்க மாட்டாது என்பது – என் ஆழ்மனதின் நம்பிக்கை.

(கட்டுரையாளர் – ஓர் அதிபர். அட்டளைச்சேனை சஹ்ரா வித்தியாலயத்தில் கடமையாற்றுகிறார்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்