
– பாறுக் ஷிஹான் –
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை அறுக்கும் தொழுவங்களையும், இறைச்சி விற்பனை நிலையங்களையும் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் – ஒரு வார காலத்துக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக, பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தன. இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏலவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய ரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னதாக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கொண்டு செல்ல ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் உடனடித்தடை விதிக்கப்பட்டது.
பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.



