
இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், இந்தக் கடனை வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த நிதியம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 48 மாதங்களுக்காக இந்த உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பது மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிக்கொணர்வது இந்த நிதித் திட்டத்தின் நோக்கங்களாகும்.



