தலைப்புச் செய்திகள்

இலங்கைக்கு இந்தியா முடிந்தளவு உதவி செய்துள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளது என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன், உதவிகளைப் பெறும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு எந்த உதவியையும் செய்வோம்” என்றார்.

இந்தியா மற்றும் சீனாவின் உறவுகளில் இலங்கையின் தாக்கம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்; “இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைய வேண்டுமானால், அவ்வாறு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன, அது இலங்கை விடயம் மட்டுமல்ல” என்றார்.

இந்தியாவும் சீனாவும் கைகோர்ப்பது – சொந்த நலனில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

​​”சீன தரப்பில் ஞானம் உதயமாகும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் ‘இந்தோ – பசிபிக் பற்றிய இந்தியாவின் பார்வை’ என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றிய பின்னர், தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்திய வெளியுறவு அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.