தலைப்புச் செய்திகள்

‘விசிட் வீசா’வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: அமைச்சர் மனுஷ எச்சரிக்கை

‘விசிட்’ (Visits Visa) வீசாக்களை பயன்படுத்தி வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் மாபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

‘விசிட்’ வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பும் நடவடிக்கயைில் மாஃபியா குழு ஒன்று ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த ஆள் கடத்தலில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

விமான நிலையம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விமான நிலைய சேவைகள், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு மாஃபியாவை நடத்துவதாகக் கூறிய அவர், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மூலம் வேலை தேடுவதற்காக ‘விசிட் வீசா’வில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.