தலைப்புச் செய்திகள்

பொது இடங்களில் சத்தமாக குரலெழுப்பினால் 100 றியால் அபராதம்: சஊதி அரேபியா அறிவிப்பு

பொது இடங்களில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குரல் எழுப்பும் எவருக்கும் 100 றியால் அபராதம் விதிக்கப்படும் என, சஊதி அரேபியா அறிவித்துள்ளது.

சூறா கவுன்சில் மற்றும் அமைச்சர்கள் குழு நிபுணர்கள் பணியகத்தின் அங்கீகாரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், பொது ஒழுக்க சட்டத்தின் மீறல்கள் தொடர்பான விதிமுறைகளுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்ததாக – சஊதி அரேபியாவின் பொது ஒழுக்க பிரிவின் உப தலைவர் காலித் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

பார்வையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தும் அல்லது அவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் பொது இடங்களில் குரல் கொடுப்பது அல்லது அச் செயலைச் செய்வது பொது ஒழுக்கத்தை மீறுவதாகக் கருதப்பட்டு 100 றியால் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள சில சந்தைகளில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆண்களும் பெண்களும் அடக்கமான வகையில் உடை அணிய வேண்டும், அவதூறான மொழி அல்லது சைகைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குப்பைகளை கொட்டுவது, துப்புவது, அனுமதியின்றி நபர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், பிரார்த்தனை நேரங்களில் இசை வாசித்தல் ஆகியவையும் விதி மீறல்களாக அமையும். அதற்காக 50 தொடக்கம் 6000 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.