ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது

🕔 August 3, 2022

– கலீல் மொகமட் –

ள்ளிவாசல்களில் ஐங்கால தொழுகையின் போது ஒலி பெருக்கி பாவனை நகரப்புறங்களில் மிகவும் குறைந்து விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி பாவனை அதிகமாக காணப்படுகின்றது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

சத்தத்துடன் ஒலிபெருக்கியை உபயோகிப்பதால் பள்ளிவாசல் அருகிலுள்ள வீடுகளிலுள்ள சிறு குழந்தைகளின் செவிப்புலன்கள் பாதிக்கப்படுகின்றன. பிறந்து ஓரிரு வாரங்களில் உள்ள குழந்தைகள் அதிக ‘ஹேட்ஸ்’ ஒலியை தாங்கக்கூடியதாக இல்லை.

இதனால் குழந்தைகளுக்கு கேட்கும் திறமை குறைவடைய நிறைய வாய்ப்புக்கள் உண்டு. பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் அடுத்த சமூகத்தினை பாதிக்கக்கூடிய வகையில், விமர்சிக்கக்கூடிய வகையில் எமது வணக்க வழிபாடுகளை ஆக்கிக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும்.

இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இவ்விடயத்தில் தெளிவான அறிவுறுத்தல்களை பள்ளிவாசல்களுக்கு வழங்கவேண்டும்.கிராமப் புறங்களிலும் சில வளர்ச்சியடைந்த கிராமப்புறங்கள் ஐங்கால தொழுகையின்போது ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொண்டன.

ஆனால் வளர்ச்சியடையாத கிராமப் புறங்களே இவ் ஒலிபெருக்கி பாவனைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. பள்ளிவாசல்களுள் உள்ளக ஒலிபெருக்கிகளை பாவிக்கலாம்.

ஆனால் இங்கு கடமைபுரியும் மௌலவிமார்கள் தங்களது குரல் ஊர்முழுக்க கேட்கவேண்டும் என நினைக்கின்றார்கள்.

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம். இந்த மார்க்கத்தை போதிப்பவர்கள் முதலில் அடுத்த சமூகத்தையோ, அடுத்தவர்களையோ அசிரத்தைக்கு ஆளாக்கக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் உயரமானதும், அமைதியானதுமான இடத்திலேயே அல்லாஹ்வை தியானிக்க சென்றார்கள். அங்கேயே முதன் முதலில் குர்ஆனின் முதல் வசனங்களை வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக இறக்கிவைத்தான்.

பள்ளிவாசல்கள் வணக்க வழிபாடுகளுக்கு சிறந்த இடம். அங்கு அமைதி நிலவ வேண்டும். இவ் அமைதியான இடத்தை அமைதியற்ற இடமாக மாற்றக்கூடாது.

ஆகவே, மார்க்கத்தைக் கொண்டு அடுத்தவர்களையோ, அடுத்த சமூகத்தையோ மதித்து நடக்கும் அளவுக்கு பள்ளிவாசல் நிருவாகம் நடந்து கொள்ளவேண்டும். இவ்விடயங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் யதார்த்தமாக, பொதுதத்தன்மையுடன் பார்ப்பவர்களுக்கு எனது இப்பதிவின் உண்மைத்தன்மை புரியும்.

குறிப்பு: இந்த ஆக்கத்துக்குரியவர் ஓய்வு பெற்ற கல்விக் கல்லூரி பீடாதிபதி, மூத்த ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான ஆக்கம்: உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா?

Comments