உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா?

🕔 June 13, 2022

– கலீல் முகம்மது அலியார் –

ரத்த சத்தத்தை இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. சமய போதகர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் அவர்கள் உரத்த குரலில் போதனை செய்வதில்லை. சமய போதனைக்கு என்று ஒரு பிரத்தியேகமான குரல் ஒன்று உண்டு. அது அடக்கமானது.

இஸ்லாமிய அறிஞரும் தத்துவஞானியும் உலக பிரசித்தி பெற்ற கவிஞருமான ஸுபி ஜலாலுடீன் றூமி அவர்கள் – உரத்த சத்தம் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள். “உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள் குரல்களை அல்ல. மலர்கள் மலர்வது இடியினால் அல்ல மழையினால்.

“சில பள்ளிவாசல்களில் இருந்து வரும் உரத்த சத்தத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது சம்பந்தமாக இஸ்லாம் மிகத் தெளிவாக கூறியுள்ளது. “புனித குர்ஆனை எவ்வளவு உரத்து ஓதவேண்டும் என்பது வரையறுக்கபடவில்லை. இருந்தும் ஓதுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் வேதனைதரும் அளவுக்கு குர்ஆனை ஓதுதல் வெறுக்கப்படுகின்றது” – (புகாரி ஷரியத் 3/239).

மேலும் இஸ்லாம் கூறுகின்றது; “புனித குர்ஆனை உரத்து ஓதுபவர்கள் வெளிப்படையாக தர்மம் செய்பவர்கள் போல, மெதுவாக ஓதுபவர்கள் ரகசியமாக தர்மம் செய்பவர்கள் போல” (சுனன் அபு தாவூத் (1333), சுனன் அல் திர்மிதி (2919).)

இஸ்லாம் எவ்வளவு அழகாக நிசப்தத்தை வேண்டுகின்றது என்பதை இங்கே பாருங்கள். கூட்டுத் தொழுகைகளின்போது இமாமின் சத்தம் பற்றி கூறுகையில்; ……… கூட்டுத் தொழுகைகளின் போது இமாமின் சத்தம் குறைந்தது முன்வரிசையில் இருப்பவர்களுக்கு கேட்ககூடியதாக இருந்தால் போதுமானது என்று தெளிவாக கூறியுள்ளது. (Dūrr e Mūkhtār 1/359, Bahār e Shari’at 3/238).

புனித குர்ஆனை ஓதும்போது ஒரு தனி மனிதனின் நித்திரைகூட பாதிக்கப்படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. “உறங்கிக்கொண்டிருக்கும் அல்லது பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு இடைஞ்சலாக அமையுமானால், நீங்கள் குர்ஆனை அவருக்கு இடைஞ்சலாக இருக்கும் அளவுக்கு உரத்து ஓதவேண்டாம்.” [Maalik in Al-Muwatta’, and Ibn ‘Abdul Barr said: Saheeh (sound) Hadeeth].

மசூதிகளில் உரத்த சத்தம் ஏற்படுத்தியமைக்காக பிரச்சினைகள் உச்ச நீதிமன்றம் வரை சென்றன. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தன. மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தை பிழையாக புரித்து கொள்வதற்கு வழிவகுத்தன. பள்ளிவாசல்களை வெவ்வேறு பின்னணிகளை கொண்டவர்கள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் வித்தியாசமான புரிந்துணர்வுகளை கொண்டவர்கள். இவர்களுக்கு ஏன் உலமாக்கள் உரிய ஆலோசனைகளை உரத்த குரலில் வழங்குவதில்லை என்பது எனக்கு புரியவில்லை.

ஒலிபெருக்கி சத்தம் பல்வேறுபட்ட இன்னல்களை ஏற்படுத்துகின்றது. மாணவர்களுக்கு கற்க முடியாமை, நோயாளிகளுக்கு வேதனை, ஒன்லைன் கற்றலில் சிரமம், Zoom meetings களில் பங்குபற்ற முடியாமை, அவசர தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் அளிக்க முடியாமை, சிறு பிள்ளைகள் ஆபத்தில் சிக்கி சத்தம் போடும்போது அவர்களை காப்பாற்ற முடியாமை – இதுபோன்று மேலும் பல.

சில பள்ளிவாசல்களில் பத்து நாள் நிகழ்வு – ஒலிபெருக்கி மூலம் உரத்த சத்தத்தில் நடைபெற்றது. அவர்கள் அப்போது உயர்தர பரீட்சை நடைபெறுவதை நன்றாக அறிவார்கள். என்ன செய்யலாம்? இது அறிவின் சரிவு.

குறிப்பு: இந்த ஆக்கத்துக்குரியவர் ஓய்வு பெற்ற கல்விக் கல்லூரி பீடாதிபதி, மூத்த ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்