பின் கதவால் வழங்கப்பட்ட அறிவிப்பாளர் நியமனம் ரத்து: ‘புதிது’ செய்தித்தளத்துக்கு சவால் விடுத்த நாகபூசணி எங்கே?

🕔 May 26, 2022

– தம்பி –

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவைக்கு முறையற்ற விதத்தில் பின் கதவு வழியாக வழங்கப்பட்ட அறிவிப்பாளர் நியமனங்களை ரத்துச் செய்யுமாறு கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க உத்தரவிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதனடிப்படையில் குறித்த நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, புதிதாக அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொள்வதற்காக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி, விளம்பரங்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டமையை அம்பலப்படுத்தும் வகையில் ‘புதிது’ செய்தித்தளம் கடந்த ஜனவரி 05ஆம் திகதி ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு’ எனும் தலைப்பில் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இதன் பின்னர் இவ்விடயம் குறித்து மேலும் சில செய்திகளை ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டது. அதேவேளை, மேற்படி முறையற்ற நியமனத்தை – சட்ட ரீதியாக பலர் சவாலுக்கு உட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாகவே, தற்போது அந்த நியமனங்களை ரத்துச் செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பாளர்களை தேர்வு செய்யுமாறு கூட்டுத்தாபனத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் அறிவிப்பாளர்களாகக் கடமையாற்றும் சீத்தாராமன் மற்றும் நாகபூசணி ஆகியோரின் உறவினர்களும் இவ்வாறு முறையற்ற ரீதியில் அறிவிப்பாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நேர்முகத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டமைக்கு அமைவாக மொத்தம் 16 பேர் இவ்வாறு அறிவிப்பாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டதோடு, வானொலியில் அறிவிப்புச் செய்வதற்கும் இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி முறையற்ற நியமனம் தொடர்பில் செய்தி வெளியிட்டபோது, ‘புதிது’ செய்தித்தளத்தை தொடர்பு கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர் நாகபூசணி; அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்ததோடு, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்திகள்:

01) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

02) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்