வெம்மை தணிக்கும் வெள்ளரிப்பழம்; ‘நெருப்பு’ விலை: மவுசுக்கும் குறைவில்லை

🕔 April 27, 2022
துஷாந்தன்

– மப்றூக் –

சித்திரை மாதத்தில் முன்னரெல்லாம் வெள்ளரிப்பழ வியாபாரம் களைகட்டும். வெள்ளரிப்பழத்தை ‘ஜுஸ்’ செய்து குடித்தால் உடலும் மனமும் குளிர்ந்து போகும். ஆனால், இம்முறை வெள்ளரிப்பழத்தை முன்னரைப் போல் சந்தைகளில் வெகுவாகக் காண முடியவில்லை. பழத்தின் விலைகளும் முன்னரை விட பல மடங்கு அதிகம்.

மட்டக்களப்பு – கிரான் குளத்திலிருந்து வெள்ளரிப்பழத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து, அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று வரையிலும் விற்பனை செய்கிறார் துஷாந்தன்.

வெயில் காலத்தில் வெள்ளரிப்பழத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்ற போதிலும், இப்போது அவற்றின் விலைகள் முன்னரைப் போல் இல்லை; பல மடங்கு அதிகரித்து விட்டது.

முன்னரெல்லாம் 100 அல்லது 120 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடிந்த வெள்ளரிப்பழமொன்றின் இன்றைய விலை 300 ரூபா. ஆனாலும் வெயில் காலம் என்பதாலும் கூடவே ரமழான் நோன்பு என்பதாலும் மக்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர்.

கைவிடப்பட்ட தொழில்

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டம் – திராய்க்கேணி கிராமத்தில் ஏக்கர் கணக்கில் வெள்ளரிப்பழச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது அங்கு ஏராளமானோர் அந்தத் தொழிலைக் கைவிட்டு விட்டனர்.

திராய்க்கேணி கிராமத்தில் தற்போது இரண்டு இடங்களில், சுமார் கால் ஏக்கர் அளவான பரப்பில் வெள்ளரிச் செய்கையில் ஈடுபட்டு வரும் கண்ணகை; முன்னர் பல ஏக்கர் காணியில் வெள்ளரிச் செய்கையில் ஈடுபட்டு வந்தவர்.

கண்ணகை

ஆனால் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பசளைக்கான தட்டுப்பாடும் பல மடங்கு விலையேற்றமும் காரணமாக வெள்ளரிச் செய்கையை – தான் உட்பட பலரும் கைவிட்டு விட்டனர் என்று அவர் கூறுகின்றார்.

“வெள்ளரிப் பயிர்களுக்கு இயந்திரங்கள் மூலம்தான் நீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. ஆனால் இப்போது மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. அதனாலும் வெள்ளரிச் செய்கையை கைவிட வேண்டியேற்பட்டு விட்டது” என்றும் கண்ணகை தெரிவிக்கின்றார்.

வெள்ளரியைப் பயிரிட்டு 03 மாதங்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கர் காணியில் 1500 வெள்ளரிச் செடிகளைப் பயிரிட முடியும் என்கிறார், இந்தத் தொழிலைக் கைவிட்டுள்ள ரஞ்சித குமாரி. இவர் திராய்க்கேணியைச் சேர்ந்தவர். நல்ல பசளையும் நாசினிகளும் சிறப்பாக வழங்கப்பட்டு, போதியளவு நீரும் கிடைத்தால், ஒரு வெள்ளரிச் செடியில் 10 வரையில் பழங்களை அறுவடை செய்ய முடியும் எனவும் ரஞ்சித குமாரி கூறுகின்றார்.

ஆனால், அந்தளவு விளைச்சல் அநேகமாக இம்முறை எங்குமே கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தனது வெள்ளரித் தோட்டத்தில் இம்முறை விளைந்துள்ள காய்கள் முன்னரைப் போல் இல்லை என்றும், அவை வளர்ச்சி குன்றிக் காணப்படுவதாகவும் கண்ணகை கவலை தெரிவிக்கின்றார்.

கண்ணகையின் தோட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்