எரிவாயு விநியோக முகவரான ராஜாங்க அமைச்சரின் வாகனம் மீது சிலிண்டரினால் தாக்குதல்: மக்களும் எதிர்ப்பு

🕔 March 21, 2022

ராஜாங்க அமைச்சரும், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, கனக ஹேரத் பயணித்த வாகனம் மீது  சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ராஜாங்கக அமைச்சருக்கு எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று (21) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேகாலை மாவட்டத்துக்கான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதான விநியோக முகவரான, ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இன்று காலை கேகாலை ரன்வல சந்தியின் ஊடாக பயணித்தபோது, எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்த முற்பட்டதாகவும், அதன்போது வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கையில் இருந்த எரிவாயு சிலிண்டரினால் ராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக கேகாலை மாவட்டத்தில் பிரதான எரிவாயு விற்பனை முகவராக இருந்துவரும் ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், கேகாலை மாவட்டம் முழுவதும் பல எரிவாயு விநியோக முகவர் நிலையங்களையும் கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தின் பின்னர் வீதியை மறித்து  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சிறிது நேரத்தில்  அவ்வீதியின் ஊடாக பயணித்த கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக, சம்பவம் தொடர்பில் அறிந்ததையடுத்து மாற்று வழியில் பயணித்ததாக தெரியவந்துள்ளது.

நாட்டில் தற்போது எரிவாயுவுக்கான தட்டுப்பாட்டு நிலவுவதால் அதிக எண்ணிக்கையான மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

Comments