தலைப்புச் செய்திகள்

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸில் இருந்தபோது, முஸ்லிம் காங்கிரஸையும் அதன் பிரதிநிதிகளின் அபிவிருத்தித் திட்டங்களையும் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்ததாகவும், அவ்வாறு அநியாயங்களைச் செய்தவரை தற்போது கட்சிக்குள் மு.கா. தலைவர் சேர்த்துள்ளதாகவும், இதுதான் கட்சியின் நிலை என்றும் – மு.கா.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கடுமையாகச் சாடினார்.

சம்மாந்துறையில் சனிக்கிழமையன்று மு.கா. தலைவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நான் இருந்த போது, உதுமாலெப்பை சிங்களவர்களோடு இணைந்து கொண்டு, சம்மாந்துறை சார்பாக நான் முன்வைக்கும் திட்டங்களை எதிர்பவராக இருந்தார்.

நான் கிழக்கு மாகாண அமைச்சராக இருந்தபோது சம்மாந்துறை சார்பில் காணி விடயமொன்று தொடர்பாக, நான் கொண்டு சென்ற திட்டமொன்றினை எதிர்த்தவர்தான் இந்த உதுமாலெப்பை. இவர் சிறிய அநியாயம் செய்தவரில்லை. 

அவரையும் இந்தக் கட்சியில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் கட்சியின் நிலைமை.

ஆகவே, காலத்துக்குக் காலம் கட்சிக்குள் வந்து போகின்றவர்கள் விடத்தில் – தலைவர் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஹரீஸிடம் நீங்கள் பாடம் படித்தவர். ஹரீஸ் உங்களுக்கு கல்லெறிந்த போது, அதற்குத் தலையைக் கொடுத்தவன் நான். ஹரீஸின் வீட்டடியிலுள்ள பள்ளிவாசலடியிலிருந்து உங்களை நாங்கள் பாதுகாப்பாக கொண்டு வந்தோம். அதன் பிறகு அவரை நீங்கள் கட்சியில் சேர்த்தீர்கள். இந்த விடயங்களில் கவனமாக இருங்கள்.

தனித்துவ அரசியல் இப்போது தோல்லியடைந்துள்ளது. நாம் மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன? எமது கட்சி சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதனை வைத்துப் பேரம் பேசி, அதனூடாக உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக என்றால், அதுவெல்லாம் இப்போது இல்லை.

தலைவர் இந்த நிகழ்வுக்குத் தனியே வந்திருக்கிறீர்கள். கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவில்லை. ஆகவே, இனி எந்தக் கட்சியின் கூட்டும் நமக்குத் தேவைப்படாது.

கட்சியுடன் இருப்பவர்களை வேட்பாளர்களாக்குங்கள். சீசனுக்கு கட்சிக்குள் வருகின்றவர்களெல்லாம் சரி வராது.

நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, சரியான நபர்கள் வெற்றிபெற வேண்டும். அதற்கு நாம் என்ன தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ளோம்” என்றார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் உரையாற்றும் போது, அவர் அங்கிருக்கவில்லை.

தொடர்பான செய்தி: ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு