விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை விமர்சித்ததால் வந்த வினை

🕔 March 3, 2022

மைச்சர் பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எரி சக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும், கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்சவும் பதவி வகித்து வந்த நிலையிலேயே அவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி மற்றும் கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நேற்றைய தினம் கூட்டம் ஒன்றினை நடத்தியதோடு, ‘முழு நாடும் சரியான பாதையில்’ எனும் தொனிப் பொருளில் தேசிய கொள்கைப் பிரகடனம் ஒன்றினையும் வெளிட்டனர். அதில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற அந்த நிகழ்வில் பேசிய விமல் வீரவன்ச அரசாங்கத்தை மிகவும் தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

மேற்படி கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் கலந்து கொண்டு, அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, விமல் வீரவன்ச அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டமையை அறிவித்து, ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட கடிதத்தை சமூக வலைததளத்தில் வெளியிட்டுள்ள விமல் வீரசன்ச, அதற்கு ‘நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments