நீதிபதியின் அக்கரைப்பற்று வீட்டில் கொள்ளையிடப்பட்ட நகை சிக்கியது; சந்தேக நபர்களும் அகப்பட்டனர்: அதிரடி காட்டிய அஸீம் குழு

🕔 February 5, 2022

– மப்றூக் –

க்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரனின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தாலிக்கொடி மற்றும் சில இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள், உருக்கப்பட்ட நிலையில் கொழும்பு – செட்டியார் தெருவில் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான குழுவினர் இந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

செங்கலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நகைகளை, கொழும்பு – செட்டியார் தெருவில் விற்பனை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் திருடும் நகைகளை கொள்ளையர்களும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்த பௌத்த பிக்குகள் இவரும் சேர்ந்து, செங்கலடியிலுள்ள நபரிடம் ஒப்படைத்து வந்ததாகவும், அந்த நகைகளை செங்கலடி நபர் கொழும்பு – செட்டியார் தெருவில் விற்பனை செய்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிபதி வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி த. கருணாகரனின் அக்கரைப்பற்றிலுள்ள வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது.

இரவு வேளையில் நீதிபதியின் வீட்டு ஜன்னல்களை உடைத்துப் புகுந்த கொள்ளையர்கள், அவரின் மனைவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஓடினர்.

அப்போது கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சித்த நீதிபதி, கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்.

இங்கு மட்டுமன்றி, அக்கரைப்பற்றிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின்வீடு உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.

தேடுதல் நடவடிக்கை

இதனையடுத்து கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அக்கரைப்பற்று பொலிஸாரும் பொலிஸ் திணைக்களத்தின் வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்ட போதும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டோர் அகப்படவில்லை.

அஸீமிடம் பொறுப்பு ஒப்படைப்பு

இந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்து, அண்மையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றலாகிச் சென்று, அங்கு குற்றப் பிரிவுக்குப் பொறுப்பாகவுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீமிடம் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் குணரட்னவின் உத்தரவுக்கமைய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தேசப்பிரியவின் நேரடிக் கண்காணிப்பிலும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயசிங்கவின் ஆலோசனையின் பேரிலும் கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் அஸீம் தலைமையிலான குழு ஈடுபட்டது.

கொள்ளையர்களுக்கு வலை

கொள்ளையர்களைப் பிடிக்கும் பொருட்டு – நீதிபதியின் வீட்டில் கொள்ளை நடந்த நாளில், அந்தப் பகுதியில் பதிவான சிசிரிவி காட்சிகளை முதலில் அஸீம் குழுவினர் திரட்டத் தொடங்கினர். அதன்போது சிலர் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டனர்.

அதனையடுத்து அடையாளம் காணப்பட்ட நபர்களின் தொலைபேசி இலங்கங்கள் திரட்டப்பட்டு, அவர்கள் அடிக்கடி உரையாடியவர்களின் தகவல்களும் பெறப்பட்டன.

இந்த நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபரகப் பெயரிடப்பட்டுள்ளவர் எனக் கூறப்படுகிறது.

இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களைத் தேடி அஸீம் குழுவினர் விரைந்தனர்.

சந்தேக நபர்களின் தொலைபேசித் தொடர்புகளை வைத்து, அவர்கள் மஹரகமவில் இருப்பதை அறிந்த பொலிஸ் குழுவினர் – அங்கு சென்றனர். ஆனால், சந்தேக நபர்கள் சிக்கவில்லை. பின்னர் அவர்களைத் தேடி அம்பாறை மாவட்டத்துக்கு பொலிஸார் விரைந்தனர்.

இந்த நிலையில், கொள்ளையர்களுக்கு தமண பிரதேச விகாரையொன்றிலுள்ள இளம் பௌத்த பிக்குகள் இருவர் உதவி செய்கின்றமை பொலிஸாருக்குத் தெரியவந்தது.

இந்த பௌத்த பிக்குகள் இருவரும் கடந்த 31ஆம் திகதி இரவு, கொள்ளையர்களை கார் ஒன்றில் ஏற்றுவதற்காக, தமண விகாரையிலிருந்து வெளியேறுவதை பொலிஸார் அறிந்து கொண்டனர். இதனையடுத்து இவர்களை பொலிஸார் பின்தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் பௌத்த பிக்குகள் பயணித்த கார், காரைதீவு பிரதான வீதியில் நிறுத்தப்பட்டு, மோட்டார் பைக்கில் வந்த கொள்ளையர்கள் இருவரை ஏற்றிக் கொள்ள முயற்சித்த போது, அவர்களை அஸீம் குழுவினர் சுற்றி வளைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் பைக்கில் வந்த கொள்ளையர்களில் ஒருவர் மற்றைய கொள்ளையரை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான சந்தேக நபர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும், இவர் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

பௌத்த பிக்குகள் கைது

குறித்த இடத்தில் காரில் வந்த பௌத்த பிக்குகள் இருவரும் அன்றிரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் 27 மற்றும் 22 வயதுடையவராவர்.

பிக்குகள் பயணித்த கார்

கொள்ளையர்களில் ஒருவர் – மேற்படி பௌத்த பிக்கு ஒருவரின் சகோதரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குகள் பயணித்த காரில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 01ஆம் திகதியன்று மேற்படி பௌத்த பிக்குகள் இருவரும் அக்கரைப்பற்று நீதவான் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, பிக்குகள் இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்தப் பின்னணியில், ஏனைய சந்தேக நபர்களையும் திருடப்பட்ட பொருட்களையும் தேடி, அஸீம் குழுவினர் கொழும்பு வரை சென்றிருந்த நிலையிலேயே, அக்கரைப்பற்றிலுள்ள நீதிபதியின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட 12 பவுண் தாலி, மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வீட்டில் திருடப்பட்ட 11 பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி கொள்ளையர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன என்றும், இவர்கள் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான இந்த நடவடிக்கையில் உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உப பரிசோதகர் பகீரதன், பொலிஸ் சாஜன்ட்களான ஹுசைன், றிஸ்வான், தாஹிர், பொலிஸ் உத்தியோகத்தர்களான குணசிங்க, ஜயகுமார் மற்றும் அனோஜன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உருக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்