ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

🕔 January 31, 2022

க்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார்.

நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத் தலைவர் என்ற வகையில், தன்னையும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் ரணதுங்க கூறியுள்ளார்.

“அரசியல் பேரணியை நடத்துவது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதை மதிப்பதோடு, அதனை நம்பும் நபர் என்ற முறையில், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனவும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தாம் ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரணதுங்க, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருவர் கைது

இந்த நிலையில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது நேற்று (30) கலகெடிஹேன பிரதேசத்தில் குழுவொன்று முட்டைகளை வீசியதாக கூறப்படும் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிலோன் ருடே செய்தி வெளியிட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள், சந்தேக நபர்கள் இருவரையும் நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுர குமார திஸாநாயக்க குறித்த நிகழ்வுக்கு வந்திருந்தபோது, நுழைவாயிலுக்கு அருகில் கூடியிருந்த பலர், அவரது கார் மீது முட்டைகளை வீசினர்.

இதன்போது இருவரை ஆதரவாளர்கள் பிடித்த நிலையில் மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் எனவும் மேற்டி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்