இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

🕔 January 14, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

லங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், அரிசிக்கான விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரசி 168 ரூபாவிலிருந்து 200 ரூபா வரையில் விற்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் – முதல் வாரமளவில் அரிசிக்கு 103 ரூபா கட்டுப்பாட்டு விலையினை விதித்து அரசு அறிவித்திருந்தது.

இருந்தபோதும் தற்போது இலங்கையில் நெல் மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசு ரத்துச் செய்துள்ளது.

இதன் காரணமாக, அரிசியினைக் கொள்வனவு செய்யும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் திண்டாட்டத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

அரிசி உற்பத்தித் தொழிலில் 40 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளதாகக் கூறும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரிசி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கமொன்றின் தலைவர் ஏ.எல். பதுறுதீன், “இலங்கையில் நெல்லுக்கு இது போன்றதொரு அதிகரித்த விலை இருந்ததில்லை” என்கிறார்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் அறிவித்து, ரசாயன பசளை இறக்குமதியினை நிறுத்தியமை காரணமாகவே, நெற் விளைச்சல் வீழ்ச்சியடைந்தது என்றும், அதுவே நெல்லின் விலையேற்றத்துக்கான பிரதான காரணம் எனவும் பதுறுதீன் கூறுகின்றார்.

இயற்கை விவசாயத்துக்கு மாறுமாறு அரசாங்கம் அறிவித்தமையினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட – தற்போதைய பெரும்போக நெற்செய்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் நெல் விளைச்சல் அரைவாசியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பிபிசி தமிழ் சந்தித்துப் பேசிய விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில விவசாயிகள் ரசாயன பசளையினை கறுப்புச் சந்தையில் 10 மடங்குக்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்து, தமது நெற்பயிர்களுக்கு விசிறியிருந்தமையினால், நெல் உற்பத்திக்கான செலவு இம்முறை சில தரப்பினருக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை விவசாயிகளிடமிருந்து நெல்லினை இடைத்தரகர்கள் பெற்று, அவற்றினை அரிசி ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமையும் நெல்லுக்கான விலை அதிகரிப்புக்கான மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

ஒரு மூடை நெல்லுக்கு இடைத்தரகர்கள் சில சமயங்களில் 500 ரூபா வரையில், கொள்ளை லாபம் பெற்றுக் கொள்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

நெல் மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை அரசாங்கம் நீக்கியுள்ளமையினால், நினைத்த விலைகளில் அவற்றினை விற்க முடியுமான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பதுறுதீன் குறிப்பிடுகின்றார்.

ஆயினும், மிகச் சிறியதொரு தொகை லாபத்தை தாங்கள் பெற்றுக் கொள்ளும் வகையில்தான், அரிசியை சந்தைக்கு தாம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, நாட்டின் அதிகமான பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகின்றமையால், நெல் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை மேலும் அதிகளவு பெய்தால் நெல்லை அறுவடை செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்கிற அச்சத்தில், உரிய காலத்துக்கு முன்னராகவே தமது வயல்களில் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்கின்றமையினையும் காண முடிகின்றது. இதனால் தரமற்ற நெல் – சந்தைக்குச் செல்லும் நிலைவரமும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நெல்லினை மேலும் அதிக விலைக்கு விற்கும் நோக்கத்துடன் அவற்றினை சேமித்து அல்லது பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவது வழமை என்றும், அவ்வாறு இம்முறையும் நடந்தால் நெல்லுக்கான தட்டுப்பாடு மென்மேலும் அதிகரிப்பதோடு, அதற்கான விலை இன்னும் உயர்வடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் பதுறுதீன் கூறுகின்றார். அப்படி நடந்தால், அரிசி உற்பத்தியாளர்களுக்கு போதியளவு நெல்லினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஏ.எல். பதுறுதீன்

இதேவேளை, நெல் விளைச்சல் அரைவாசியளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நெல்லுக்கான விலை அதிகரித்திருப்பதால் தமக்கு எதுவிதமான லாபங்களும் கிடைக்கப்போவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் அதிகரித்திருக்கும் நிலையில், நெல் விலையேற்றம் – விவசாயிகளுக்கு நன்மையளிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைவரத்துக்குக் காரணம்

நாட்டில் தற்போது நெல் உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கும் அதனால் நெல்லுக்கான விலை வரலாற்றில் எப்போதமில்லாதவாறு அதிகரிப்பதற்கும் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் திடீரென அறிவித்த இயற்கை விவசாயக் கொள்கையாகும்.

விவசாயத்துக்கு தேவையான ரசாயன பசளையினை மிக நீண்ட காலமாக ஒவ்வொரு அரசாங்கமும் மானிய விலையிலேயே மக்களுக்கு வழங்கி வந்தது.

இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது; தான் வெற்றிபெற்றால் விவசாயத்துக்கான ரசாயனப் பசளையினை, தனது ஆட்சிக் காலத்தில் இலவசமாக வழங்கப் போவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால் நடந்த கதை வேறு. ஜனாதிபதித் தேர்தலில் 2019ஆம் ஆண்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரசாயனப் பசளை, களை மற்றும் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்வதற்கான தடையினை விதிக்கும் தீர்மானத்தை எடுத்ததோடு, இயற்கை விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமெனவும் அறிவித்தார்.

இது விவசாயிகளிடையே பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. குறிப்பாக இயற்கை விவசாயத்தில் எவ்வித முன் அனுபவங்களுமற்ற நெற் செய்கையாளர்கள் இதனால் பெரும் பாதிப்படைந்தனர்.

இதேவேளை நெற் செய்கைக்குரிய தரமான இயற்கைப் பசளைகளை போதுமானளவு அரசாங்கம் தமக்கு வழங்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறானள சூழ்நிலையில், நெல் மற்றும் அரிசி விலைகள் இன்னும் அதிகரிக்கும் என்று அரிசி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் இந்த விலையேற்றத்தினை, ஓரளவாகவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. ஆனால், நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசியை போதுமானளவு இறக்குமதி செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன.

மற்றொருபுறம், இறக்குமதி செய்யப்படும் அரிசியை விடவும், உள்நாட்டு அரிசிக்கே மக்களிடத்தில் அதிகளவு மவுசு உள்ளது என்கிறார் அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பதுறுதீன்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்