சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு

🕔 January 12, 2022
எமில் ரஞ்சன்

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ இந்த வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றம் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

சிறைச்சாலையின் கைத்தொழில் பகுதியில் பிரதிவாதிகளால் தெரிவு செய்யப்பட்ட எட்டு கைதிகளை கொலை செய்தமை, கொலைக்கு சதி செய்தமை மற்றும் மோதலை அடக்கும் போது சட்ட விரோதமாக மக்களை கூட்டிச் சென்றமை உட்பட 33 குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 09ஆம் திகதியன்று நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நெரிசலான சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இதன்போது சிறை அதிகாரியொருவரும் 20 கைதிகளும் காயமடைந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்