நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

🕔 December 11, 2015

Salmankhan - 015
ந்திய நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை ரத்துச் செய்துள்ளது.

நீதிமன்றில் ஆஜராகியிருந்த சன்மான்கான், தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையினை அடுத்து, உணர்ச்சி மேலீட்டால் அழுததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் சல்மான்கான் சென்ற கார், கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பாந்திரா பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் இறந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான்கானுக்கு விதித்த 05 ஆண்டுகள் தண்டனையை தற்போது மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.அத்துடன் அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்துள்ளது.

இந்த விபத்தை பொறுத்தவரை இறந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள், விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தவர்களாவர். இந்த வழக்கை பொறுத்தவரை, முன்னாள் போலீஸ் உத்தியோகத்தரும் சல்மானுடன் பாதுகாப்புக்கு சென்றவருமான ரவீந்தர பாட்டீல்தான் விபத்தை கண்ட நேரடி சாட்சியாக இருந்தார். தற்போது அவரும் இறந்து விட்டார். ரவீந்தர பாட்டீலின்  சாட்சியிலும் பல முரண்பாடுகள் இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதாவது, விபத்து நடந்ததும் சாரதி ஆசனதிலிருந்து சல்மான்கான்தான் இறங்கியதாக கூறப்பட்டது. ஆனால், விபத்து ஏற்பட்டதும் அந்த காரின் இடது பக்க கதவு திறக்க முடியாமல் போனதால்தான் சல்மான்கான் சாரதி இருக்கையில், அதாவது – வலதுபுற கதவு வழியாக வெளியே வந்ததாக சல்மான் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

அதே நேரத்தில் நடிகர் சல்மான்கான், அவரது நண்பர் கமால்கான் மற்றும் பாதுகாவலர் ரவீந்தர பாட்டீல் ஆகியோர் மட்டும்தான் காரில் இருந்ததாகவும் அவரது கார் சாரதியான அசோக்சிங் காரில் இல்லையென்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அசோக் சிங் காரில் இருந்ததாகவும் இந்த விபத்து நடந்தவுடன், அவர் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக சென்று விட்டதாக சல்மான்கான் தரப்பு வாதிட்டது. அதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

அதே நேரத்தில் பாந்திரா போலீஸ் நிலையத்தில், அசோக்சிங் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சல்மான் தரப்பில் வாதிடப்பட்டது. அதனையும் நீதிபதி ஏற்றுக் கொண்டார். அத்துடன் மது அருந்திய விடுதியின் பற்றுச் சீட்டுக்களை, கீழ் நீதிமன்றம் சாட்சியாக ஏற்றுக் கொண்டதை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை.

அதோடு விபத்து ஏற்பட்டதும் சல்மான்கான் அந்த இடத்தை விட்டு ஓடி விடவில்லை. காயமடைந்தவர்களுக்கு  உதவி செய்துள்ளார். ஆம்புலன்சுகளை வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு சிகிக்சைக்கு அனுப்பியுள்ளார். ஏற்கனவே கூட்டம் கூடி விட்ட நிலையில், ஒரு பிரபல்யமான நடிகர் இது போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இந்த வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. நீதிமன்றம் விடுதலை என்று தீர்த்ப்பளித்ததும் சல்மான்கான் மிகவும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டார்.  நீதிமன்றத்தின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாகவும் சல்மான் குறிப்பிட்டார்.

மும்பை மால்வானி பகுதியில் வசித்து வந்த, நுருல்லா ஷேக் என்பவர்தான் சல்மான்கான் கார் ஏற்படுத்திய விபத்தில் இறந்து போனவர். இவரது மகன் பெரோஷ் ஷேக் இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், ”13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த தீர்ப்பில் இப்போதும் தெளிவு பிறக்கவில்லை. நான் சல்மான்கானை மன்னித்து விட்டேன். ஆனால் எனது தந்தையை கொன்றது யார்? என்பதற்கு இப்போதும் விடை கிடைக்கவில்லை ”என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்