தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

🕔 December 28, 2021

தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என, பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக – நீதிமன்றத்திற்கு சென்றதோடு அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமை தவறானதென ஜனாதிபதி தெரிவித்ததாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த போதே அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறியுள்ளார்.

பத்திரிக்கைகளின் செய்தி ஆசிரியர்களுடன் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக இன்றைய தேசிய நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டப்பட்டன.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டுமாயின் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில; தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களும் யுகதனவி விடயத்தில் தவறிழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

“தவறிழைத்திருந்தால் மாத்திரமே பதவியிலிருந்து விலக வேண்டும். அத்துடன் அமைச்சர் பதவியை விட நாடும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முக்கியமானது” எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்