டொலர் பற்றாக்குறை: நாட்டிலுள்ள 50 காணிகளை வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு குத்தகைக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானம்

🕔 December 15, 2021

கொழும்பு உள்ளிட்ட முக்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 50 காணிகளை அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகமொன்றின் தகவல்படி, மொத்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதியில் 01 லட்சத்து 22019 கோடி ரூபா) மதிப்பிடப்பட்டுள்ள ஐந்து திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரையப்பட்டுள்ளன.

கொழும்பு பேர வாவிக்கு அருகில் உள்ள டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 06 காணிகள், கொம்பனித் தெருவிலுள்ள பழைய விமானப்படைத் தலைமையக கட்டிடத்தின் ஒரு பகுதி காணி, நாரஹேன்பிட்டி, ஒறுகொடவத்த, தெமட்டகொட, துன்முல்ல, தலவத்துகொட ஆகிய இடங்களில் உள்ள காணிகள், இந்த திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

காலி, மாத்தறை, கண்டி, போகம்பரை, நுவரெலியா, குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் அனுராதபுரம் பிரதேசங்களில் உள்ள காணிகளும் இதில் அடங்கும்.

சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, மலேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும், உள்ளூர் முதலீட்டாளர்களும் ஏற்கனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு காணிகளை அரசாங்கம் குத்தகைக்க வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்