பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு?

🕔 December 10, 2021

– மரைக்கார் –

ரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என எடுத்திருக்கும் தீர்மானத்துக்கிணங்க அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கப் போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தவிர, அந்தக் கட்சிகளின் 07 எம்.பிக்களும் அரசாங்கத்துடன் கிட்டத்தட்ட இணைந்து விட்டனர். தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜட்டை ஆதரிப்பது தவிர மேற்படி 07 எம்.பிக்களுக்கும் வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது, மக்கள் நலன் கொண்டதல்ல என்பதை பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிவிட்டனர். ஆனால், மேற்படி இரண்டு கட்சிகளின் எம்.பிக்களும், அவர்களின் ‘கோயபல்ஸ்’களும், “பட்ஜட்டை எதிர்த்து வாக்களிப்பதால் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன நன்மை” என்று கேட்கிறார்கள்.

நமது கையில் ஒரு வாழைப்பழம் கொடுக்கப்படுகிற என்று வைத்துக் கொள்வோம். அது நல்ல வாழைப்பழமா அல்லது அழுகிய வாழைப்பழமா என்று நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதனைக் கூறாமல்; வாழைப்பழம் அழுகிய நிலையில் இருந்த போதும், உண்மையைச் சொன்னால் அதைத் தந்தவர் கோபித்து விடுவார் என்று பயந்து, அதனை நல்ல வாழைப்பழம் என்று சொல்வதும். அழுகிய வாழைப்பழம் என்று சொல்வதால் சமூகத்துக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்று வாதிடுவதும் மடத்தனமாகும்.

அது போலவே, மக்கள் நலனற்ற பட்ஜட்டை – எதிர்த்து வாக்களிப்பதால் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன பலன் என்று கேட்பதும் அறிவுள்ள கேள்வி ஆகாது.

இது தவிர “இந்த பட்ஜட்டை ஆதரிக்குமாறு, எமக்கு வாக்களித்த மக்கள் கூறியிருக்கின்றனர் அதனால்தான் ஆதரிக்கின்றோம்” என்றும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் – மிகவும் சத்தமாகவே கூவிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஸாரப்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கடந்த தேர்தலில் 43319 வாக்குகள் கிடைத்திருந்தன. அவர்களில் பெரும்பான்மையானோரின் கருத்துக்கு இணங்க பட்ஜட் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முஸாரப் நினைத்திருந்தால், ஆகக்குறைந்தது 21660 மக்கள் இந்த பட்ஜட்டை ஆதரிக்குமாறு முஸாரப் எம்.பியிடம் கூறியிருக்க வேண்டும். அத்தனை எண்ணிக்கையானவர்கள் முஸாரபிடம் கூறினார்களா? எந்த முறைமையின் கீழ் அதனை முஸாரப் அறிந்து கொண்டார் என்பதை, முதலில் முஸாரப் கூற வேண்டும்.

சரி இன்னொரு கணக்குக்கு வருவோம். கடந்த பொதுத் தேர்தலில் முஸாரப் எம்.பிக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் 18389. இவர்களில் அரைவாசிக்கு அதிகமானோரின் தொகை 9195 ஆகும். அப்படியென்றால் இத்தனை தொகை மக்களும் முஸாரபிடம் வந்து – பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூறியிருக்க வேண்டும். அப்படி நடந்தால்தான், “பட்ஜட்டுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கச் சொல்கிறார்கள்” என்று, அவர் வாதிட முடியும்.

அவ்வாறில்லாமல் தனக்கு ஆதரவான நான்கு – ஐந்து பேரை வைத்து, ஓர் ஊடக சந்திப்பை நடத்தி, அதில் பட்ஜட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என, அவர்களைக் கூற வைத்து விட்டு, அரசாங்கத்துக்கு ஆதரவான தனது விருப்பத்தை மேற்படி நாடளுமன்ற உறுப்பினர் நிறைவேற்ற நினைப்பது அயோக்கியத்தனமாகும்.

தனது கட்சித் தலைமை சொல்வதுதான் தனக்கு வேத வாக்கு என்றும், மக்களைப் பற்றிச் சிந்திக்கும் தலைமையாக றிசாட் பதியுதீன் இருப்பதால்தான் அவருடன் இணைந்து கொண்டேன் என்றும், தேர்தல் காலங்களில் கூறித் திரிந்த முஸாரப்; இப்போது ‘மக்கள், தலைவர், கட்சி’ என்கிற வரிசையில்தான் தனது முன்னுரிமைப்படுத்தல் இருக்கும் என்று – புதிய தத்துவமொன்றை பேசித்திரிவது தன்னையே முட்டாளுக்கும் செயற்பாடாகும்.

மக்களை வைத்து ஆடுகின்ற இந்த நாடகம் முடிந்து – திரைகள் அகற்றப்படும் போது, இவர்கள் அசிங்கப்பட்டு நிற்க நேரிடும் என்பதை மறந்து விடக்கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்