தங்க முட்டையிடும் வாத்தை, அறுத்துத் தின்றவனின் கதை

🕔 November 20, 2021

– மரைக்கார் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தொடர்பில், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையினையும், அதற்கு எதிராாக முஷாரப் ஆதரவாளர்களில் ஒரு தொகையினர் கடுந்தொனியில் பதில் வழங்கி வருகின்றமையினையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது.

முஷாரப் என்பவர் – கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சொந்த சின்னத்தில் கிடைத்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தில் – மக்கள் காங்கிரஸின் ‘மயில்’ சின்னத்துக்கு கிடைக்கப்பெற்ற 43,319 வாக்குகளில் 18,389 விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டமையின் அடிப்படையில், அவர் எம்.பி. ஆனார்.

தேர்தல் என்பது – ஒரு வகை ஒப்பந்தமாகும். கட்சிகளுக்கும் அவற்றுக்கு வாக்களிப்போருக்கும் இடையிலான ஒப்பந்தமாகவும், வேட்பாளருக்கும் அவருக்கு வாக்களிக்கின்றவருக்குமான ஒப்பந்தமாகவும் கருதப்படுகிறது. ஒப்பந்தம் என்பதில் சில நிபந்தனைகள் இருக்கும். அவை மீறப்படும் போது ஒப்பந்தம் முறிந்து போகும்.

கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினர், ராஜபக்ஷக்களுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்து வாக்குக் கேட்டனர். குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமான தாமரை மொட்டு, தமக்கு ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) என்றும், ராஜபக்ஷவினர் ‘அபூ ஜஹீல்’ (முகம்முது நபியின் பகைவன்) எனச் சொல்லி, அவர்களுடன் எந்தவித ஒட்டுறவும் தமக்கு இருக்கப் போவதில்லை எனவும் கூறியே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஷாரப் – வாக்குக் கேட்டார்.

கடந்த பொதுத் தேர்தல் மேடையொன்றில் முஷாரப் ஆற்றிய உரையின் ஒரு பகுதி

இந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் முஷாரப்புக்கும் மக்கள் வாக்களித்தனர். அதாவது, ராஜபக்ஷவினருடன் எந்தவித ஒட்டுறவும் வைத்துக் கொள்வதில்லை என்கிற பிரதான நிபந்தனையின் அடிப்படையில்தான், முஷாரப் தனக்கான வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சின்னத்துக்குப் பெற்றிருந்தார்.

இந்தப் பின்னணியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த (சொந்த மற்றும் கூட்டணி கட்சிகள் மூலமாக) 04 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அக்கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தவிர்ந்த ஏனைய மூன்று (முஷாரப், அலி சப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான்) உறுப்பினர்களும் தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக மாறியுள்ளதோடு, ராஜபக்ஷவினர் நாடாளுமன்றில் சமர்ப்பித்த பல்வேறு சட்டத் திருத்தங்களுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலைவரமானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு பாரிய கோபத்தை – மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், மக்கள் காங்கிரஸின் ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்ஷவினருடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அதனூடாக றிசாட் பதியுதீனை விடுதலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்கிற கதைகளும் உலவியிருந்தன.

இப்போது சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தனது கட்சி ஆதரவாளர்களை ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று சந்தித்து வருகின்றார்.

இதன்போது அவர் ஆங்காங்கே மக்களிடையே உரையாற்றியும் வருகின்றார்.

இவ்வாறான உரைகளில் றிசாட் பதியுதீன் சில விடயங்களை குறிப்பிட்டுச் சொல்லி வருகின்றார். அவற்றில் முக்கியமானவை;

01) எனது விடுதலைக்காக ராஜபக்ஷவினருடன் பேசுமாறு எனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எவரிடமும் நான் கேட்டுக் கொண்டது கிடையாது.

02) ராஜபக்ஷவினரின் சிபாரிசின் அடிப்படையில் நான் விடுவிக்கப்படவில்லை.

03) இந்த அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்தவித ‘தேனுறவும்’ கிடையாது.

04) ஒரு சிலர் விடுகின்ற தவறுகளுக்காக கட்சியையும் கட்சித் தலைமையையும் தவறாகப் புரிந்து விடக் கூடாது.

றிசாட் பதியுதீன் (நேற்று 19ஆம் திகதி) பாலமுனையில் ஆற்றிய உரை

மேற்படி விடயங்களை றிசாட் பதியுதீன் தெரிவித்து வருகின்றமையானது, அம்பாறை மாவட்டத்தில் முஷாரப் எம்.பி.யின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நேரடியாகவே றிசாட் பதியுதீனை கடுஞ்சொற்களால் தாக்கி வருகின்றமையினை சமூக ஊடகங்களில் காண முடிகிறது.

நேற்றைய தினம் (19) அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், பொத்துவிலுக்கும் சென்றிருந்தார். முஷாரப் எம்.பி.யின் சொந்த ஊர் பொத்துவில் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சென்றிருந்த றிசாட் பதியுதீனுடன் முஷாரப் எம்.பி.யும் இணைந்திருந்திருந்தார். அதனைக் காட்டி, முஷாரப் தரப்பைச் சேர்ந்த சிலர்; றிசாட் பதியுதீனுக்கும் முஷாரப் எம்.பிக்கும் இடையில் எந்தவித கசப்பும் இல்லை என்கின்றனர். மாற்றுக் கட்சிக்காரர்களோ, றிசாட் பதியுதீனும் முஷாரப் எம்.பியும் மக்களை ஏமாற்றும் வகையில் அரசியல் நாடகமாடுகின்றனர் என்றும், ராஜபக்ஷவினருக்கு முஷாரப் ஆதரவளிப்பது றிசாட் பதிதீனின் ஒப்புதலுடன்தான் எனவும் விமர்சிக்கின்றனர்.

பாலமுனையில் (19ஆம் திகதி இரவு)

ஆனால், நிகழ்வுகள் அனைத்தையும் காணும் போது, றிசாட் பதியுதீனுடனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முரண்பட்டுக் கொண்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. மக்கள் காங்கிரஸ் தரப்புக்கு முஷாரப் மீது மிகக் கடுமையான கசப்பு ஏற்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இந்தக் கசப்பும் முரண்பாடுகளும் மிகக் குறுகிய காலத்தில் இன்னும் அதிகமாகுவதற்கான சாத்தியங்களே உள்ளன. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை முஷாரப் ஆதரிப்பார் என்பதை, அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரையின் மூலம் விளங்கலாம்.

வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்று, மக்கள் காங்கிரஸின் உயர் மட்டக் குழு – நாளை (21ஆம் திகதி) முடிவு செய்யவுள்ளது. அநேகமாக வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் முடிவினையே மக்கள் காங்கிரஸ் எடுக்கும்.

இந்தத் தீர்மானத்துக்கு மாற்றமாக முஷாரப் நடந்து கொள்வாரானால், அவர் மக்கள் காங்கிரஸின் எம்.பி இல்லை என்கிற நிலைவரம் ஏற்படும். அது அவரின் அரசியலை கடுமையாகப் பாதிக்கும்.

தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்கிற வாய்ப்பு, இதன் மூலம் முஷாரப் எம்.பிக்கு பறி போகும் நிலை ஏற்படும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை புறந்தள்ளி விட்டு, முஷாரப் எம்.பியின் அரசியல் நிலைக்கும் என்பது வெற்றுக் கூச்சலாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சம்மாந்துறையைச் சேர்ந்தவருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில், தனக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடமிருந்து கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகப் பயன்படுத்தப் போனமையினால், இன்று அரசியலில் இருந்தே காணாமல் போயிருக்கும் நிலைமையினை நாம் கண்டு கொள்ளலாம்.

தங்க முட்டையிடும் வாத்தை – அறுத்துத் தின்றவனின் கதை, முஷாரப் எம்.பிக்கு தெரியாமலிருக்க முடியாது.

றிசாட் பதியுதீன் – பாலமுனையில்…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்