செத்தாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல மாட்டோம்: அமைச்சர் வாசு

🕔 November 16, 2021

ற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (16) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்; சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கையை – தான் எதிர்க்கப் போவதில்லை என்றும் கூறினார்.

“சர்வதேச நாணய நிதியத்தை அணுகுங்கள். அங்கு போக வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அவர்களின் உதவியை நீங்கள் நாடியவுடன் – அவர்கள் அனைத்து நிபந்தனைகளையும் கூறுவார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புகளை இழக்க மாட்டீர்கள். அவர்கள் முதலில் விசாரணை நடத்துவார்கள். இங்கே எங்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார; “அரசாங்கம் அழிந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தை அணுக மாட்டோம்” என்றார்.

“நாங்கள் இறந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட மாட்டோம். நான் சொல்ல வேண்டிய இறுதி விஷயம் இதுதான். எமது அரசாங்கம் அழிந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தை அணுகி எங்கள் மக்களின் வாழ்க்கையை அழிக்க நாங்கள் தயாராக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments