11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

🕔 October 13, 2021

தினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி, பிரதிவாதி வசந்த கரண்ணாகொட மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை முன்வைத்தார்.

2008 ஆம் ஆண்டில் 05 மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட  பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்டுநாயக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் இந்தக் கடத்தல்கள் இடம்பெற்றிருந்தன.

தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெனாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும், ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்­வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அமலன் லியோன், ரொஷான் லியோன், அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா ஜெகன் உள்ளிட்டோரும் இவ்வாறு கடத்தப்பட்டிருந்தனர்.

Comments