இடிதாங்கி வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மோசடியாக பணம் திரட்டிய பொலிஸ் அதிகாரி, போலி சட்டத்தரணி உள்ளிட்ட 09 பேர் கைது

🕔 October 11, 2021

– க. கிஷாந்தன் –

டி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 09 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று (10) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவ்வாறு 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, ஒருவரின் பின் ஒருவராக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், போலி வைத்தியர் ஒருவரும், போலி சட்டதரணி ஒருவரும் அடங்குகின்றனர்.

இடி தாங்கி ஒன்றினை கொள்வனவு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், அந்த இடி தாங்கியை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்ற பின்னர் கிடைக்கும் பணத்தில் பாரிய தொகையை லாபமாக தர முடியும் என கூறியே இந்த மோசடி நடந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையிலான கொழும்பு, கண்டி, கெக்கிராவை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு, இவர்கள் பயன்படுத்திய இரு வேன்கள் மற்றும் ஒரு கார் ஆகியன நுவரெலியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில்,  கோடிக்கணக்கான மோசடி செய்யப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் இருந்த இடி தாங்கி படம் ஒன்றைக் காண்பித்து, வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு இதனை  விற்பனை செய்யவுள்ளோம், இந்த இடி தாங்கியை எடுப்பதற்கு ஒரு தொகை பணம் தேவைப்படுவதாக கூறி, ஒருவரிடமிருந்து 05 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த பணத்தை வழங்கும்  நபருக்கு, இடி தாங்கியை விற்ற பின்னர் 100 கோடி ரூபாவை தம்மால் லாபமாக தர முடியும் எனவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது போலி சட்டத்தரணியாக நடித்துள்ள ஒருவர், போலி சட்டத்தரணி முத்திரை ஒன்றினையும் பயன்படுத்தி, அதனை கொண்டு  பணம் செலுத்தும் நபர்களுடன் போலி ஒப்பந்தம் ஒன்றும் நுவரெலியாவில் விடுதி ஒன்றில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலையிலேயே குறித்த பண  மோசடி  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்யும் போது, அவர்கள் மோசடி செய்த ஒரு கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம் நுவரெலியா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்