சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

🕔 September 30, 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சுதந்திர கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவே உள்ளார். அவ்வாறிருக்கையில் அவரால் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடர முடியும்?

ஆனால் அவருக்கு சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும். அதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் இணைத்துக் கொண்டு, எமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எனவே யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை. சகலரையும் கட்சியுன் இணைத்துக் கொள்வதிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் முன்னோக்கி பயணிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்