ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

🕔 September 25, 2021

– நூருள் ஹுதா உமர் –

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய இடங்களில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.

ஞானசார தேரர் அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் பேசிய போது, கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன், அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று கூறியிருந்தார்.

எனவே இவ்வாறு பேசிய ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ளமையினாலும் இந்த குற்றச் செயலுக்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் (ICCPR) ஞானசாரவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது விடயமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்து பேசியதாகத் கூறிய மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஞானசார தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான துரித நடவடிக்கை எடுக்க பொலிசாரை பணிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments