தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியராக பதவி உயர்வு

🕔 September 25, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளருமான கலாநிதி அப்துல் மஜீத் முஹம்மது முஸ்தபா வியாபாரப் பொருளியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவரது பதவி உயர்வு 10.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் பல்கலைக்கழகப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் பேசும் சமுகங்களில் வியாபாரப் பொருளியல் துறையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியினைச் சேர்ந்தவர். இவரது தந்தை மீராலெப்பை அப்துல் மஜீத் ஒரு வர்த்தகர். தயார் முஹம்மது இஸ்மாயில் பாத்துமுத்து. பேராசிரியர் முஸ்தபா தனது பாடசாலைக் கல்வியினை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி (தேசிய பாடசாலை), காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றில் பெற்றுக்கொண்டார்.

பாடசாலைக் காலம் முதல் கல்வியில் ஆர்வமுள்ள ஒரு மாணவனாகத் திகழ்ந்த இவர், 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் பொருளியல் இளமாணிப் (B.Econ) பட்டப்படிப்பினை தொடர்ந்த இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அமையப்பெற்றபோது அப்பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டு தனது பட்டப்படிப்பினைப் பூர்த்திசெய்தார். 

பேராசிரியர் முஸ்தபா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர், அப்பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை தற்காலிக உதவி போதனை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் தற்காலிக உதவி விரிவுரையாளராக, தற்காலிக விரிவுரையாளராக, ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளராக பல பதவி நிலைப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டார்.

அர்ப்பணிப்புள்ள ஒரு இளம் பல்கலைக்கழக விரவுரையாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பேராசிரியர் முஸ்தபா, பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் நிரந்த விரிவுரையாளர் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டார். தான் ஒரு நிரந்தர விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்டது முதல், கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், தனது துறையில் முதுதத்துவமாணிப் (M.Phil) படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் (PhD) பட்டப்பின்படிப்பு ஆய்வினை வெற்றிகரமாக பூர்த்திசெய்தார். 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் விரிவுரையாளர் நிலையில் சிரேஷ்டத்துவ பதவியுயர்வு தரம் – ii, தரம் – i ஆகியவற்றை வெற்றிகரமாகக் கடந்த பேராசிரியர் முஸ்தபா, பல்கலைக்கழக கற்பித்தலில் 22 வருடகால அனுபவத்தினைக் கொண்டவர். இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் கடமையாற்றும் ஒரேயொரு வியாபாரப் பொருளியல் விரிவுரையாளருமாவார்.

தகவல்: கலாநிதி ஏ.ஏ.எம். நுபைல், தலைவர் – பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை; கலை, கலாசார பீடம். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்