நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு

🕔 September 3, 2021

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனை அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் 10 வருடங்களாக நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜை என்று – பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

தாக்குதல் தொடங்கிய 60 வினாடிகளுக்குள் அந்த நபர் கொல்லப்பட்டார் என்றும், அவர் ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) தீவிரவாத குழுவால் ஈர்க்கப்பட்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“இது வெறுக்கத்தக்கது, இது தவறானது, இது ஒரு தனிநபரால் நடத்தப்பட்டது, இது ஒரு நம்பிக்கை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர்; “இந்த செயல்களுக்கு அவர் மட்டுமே பொறுப்புதாரியாவார்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காயமடைந்த ஆறு பேரில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்தில் மார்ச் 15 2019 அன்று கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் இரண்டு பள்ளிவாசல்களில் 51 பேரை – வெள்ளை நிற வெறிகொண்ட ஒருவர் சுட்டுக் கொன்றமை நினைவு கொள்ளத்தக்கது.

மே மாதம், நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்