வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

🕔 September 1, 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ கூறியுள்ளார்.

இந்த நிலையில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், சந்திக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சருக்கு பேராயர் பதிலளித்துள்ளார்.

நிபந்தனைகள் நிறைவேறும் வரை வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதில்லை என பேராயர் உறுதியெடுத்துள்ளதாகவும் அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ கூறினார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் மால்கம் ரஞ்சித் வெளியுறவு அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கத்தோலிக்க சமூகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற, ஈஸ்டர் தினத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அரசு அமுல்படுத்த வேண்டும் என்று பேராயர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஊடகங்களில் அண்மையில் பொலிஸ் உள்ளிட்டோர் வெளியிடப்பட்ட அறிக்கைகள், தாக்குதல்கள் மீதான விசாரணையில் நம்பிக்கையை உருவாக்கவில்லை என்றும் அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக, ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நம்பிக்கையை உருவாக்கிய பின்னரே வெளியுறவு அமைச்சரை சந்திக்கப் போவதாக பேராயர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்