ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

🕔 September 1, 2021

ப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவுடன் ஆப்கானை விட்டும் வெளியேறினர்.

இதன்போது விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ராணுவ கவச வாகனங்களை அமெரிக்க ராணுவத்தினர் செயலிழக்கச் செய்து விட்டுச் சென்றிருந்தனர்.

73 விமானங்கள், 70 கவச வாகனங்கள், 27 ஹம்வீ (Humvee) ரக ராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் செயலிழக்கச் செய்துள்னர்.

“அவை மீண்டும் ஒரு போதும் இயங்காது. அவற்றை எவராலும் மீண்டும் ஒரு போதும் இயக்க முடியாது. அங்குள்ள போர் தளவாடங்களை வேறு எவராலும் இனி பயன்படுத்தவே முடியாது” என, அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தலைவரான ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவற்றைத் திருத்தி மீண்டும் தம்மால் இயக்க முடியும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தலிபான் தலைவர்களில் ஒருவரான அனஸ் ஹக்கானி ஊடகங்களிடம் பேசுகையில்; இவ்விமான நிலையத்தில் உள்ளவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானவையாகும். இவற்றை எமது பொறியியலாளர்கள் செப்பனிட்டு, மீண்டும் செயற்பட வைக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்” என்றார்.

கைவிடப்பட்டுள்ள வாகனங்களின் பெறுமதி

காபூல் விமான நிலையத்தில் இவ்வாறு அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்றுள்ள ஒவ்வொரு வாகனத்தின் மதிப்பும் 01 மில்லியன் டொலர் (இலங்கை பெறுமதியில் 20 கோடி ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 27 ஹம்வீ (Humvee) ஏவுகணை இடைமறிப்பு வாகங்களும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் சிரேம் சிஸ்டம் (C-RAM system) எனப்படும் ரொக்கெட்கள், பீரங்கிக் குண்டுகளை இடைமறிக்கும் சக்தி கொண்ட வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன.

ஆனால், “சிரேம் சிஸ்டம் செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டது. நாங்கள் வெளியேறும் கடைசி நிமிடம் வரை அந்த அமைப்பை இயங்கும் நிலையில் வைத்திருந்தோம்” என்று அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தலைவரான ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்