பாடகர் இராஜை தாக்கியதாக வெளியான செய்தி: மறுக்கிறார் பிரதமரின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ

🕔 August 26, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பிரதமரின் பணியாட் தொகுதியின் தலைமையதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ தாக்கியமையினாலேயே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல பாடகர் இராஜ் வீரரட்ன ராஜிநாமா செய்தார் எனப் பரவும் தகவலை யோஷித ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இராஜ் வீரரத்னவை யோஷித தாக்கியதாகவும், இதனாலேயே இராஜ் – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திலிருந்து ராஜநாமா செய்ததாகவும் அண்மயில் சமூக ஊடகங்களில் கதையொன்று பரவியது.

இந்த விடயம் தொடர்வில் கருத்து வெளியிட்டுள்ள யோஷித ராஜபக்ஷ; “இதுபற்றி சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை” என தெரிவித்துள்ளார்.

இந்த வதந்திகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ள யோஷித, தனக்கு இராஜ் வீரரத்னவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை சில காலங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வில் தான் சந்தித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

இலங்கை பாடகரும் பாடலாசிரியருமான இராஜ் வீரரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திலிருந்து தான் ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினராக இராஜ் வீரரத்ன 18 ஓகஸ்ட் 2020 முதல் 3 வருட காலத்துக்கு நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில், இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு இராஜ் எழுதிய கடிதத்தில்; தவிர்க்க முடியாத வேலைகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக தெரிவித்திருந்தார்.

இராஜ் எழுதிய ராஜநாமா கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்