கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம்

🕔 August 17, 2021

– பைஷல் இஸ்மாயில் – 

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் திருமதி இ. ஸ்ரீதர் இன்று  (17) தெரிவித்தார்.  

அம்பாறை மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 368 என்ற இலக்கத்துக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 369 என்ற இலக்கத்துக்கும், திருகோணமலை மாவட்டத்திலுள்ளவர்கள் 070 6800 370 என்ற இலக்கத்துக்கும் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய் பற்றிய சகல ஆலோசனைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சமூக நல மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்கள் கடந்த வருடம் தொடக்கம் இற்றை வரையான காலம்வரை கொவிட் 19 நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் பானங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, இவை தனிமைப்படுத்தலில் இருக்கும் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் கிழக்கு மாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும், அதற்கான சிகிச்சைகளையும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் மத்திய அரசினால் அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Comments