முஸ்லிம் சேவையை நிறுத்தியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: ஹட்டசனின் ஒருதலைப்பட்ச தீர்மானமா?

🕔 August 16, 2021

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று மாலை நேரத்தில் ஒலிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவில்லை. கல்விச் சேவைக்காக பயன்படுத்துவதற்கு முஸ்லிம் சேவையை நிறுத்தியுள்ளதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஒருதலைப்பட்சமாக, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று ஊடகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டளஸ் அலகப்பெருமவின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதுகுறித்து ஆராய்ந்த நல்லதொரு முடிவைக் காண்பதாக புதிய ஊடகத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சுமார் 70 வருடங்கள் பழைமைவாய்ந்த முஸ்லிம் சேவை ஐந்து நேர தொழுகை உள்ளிட்ட பல முஸ்லிம் நிகழ்ச்சிகளை நெடு நீண்டகாலம் நடத்தி வருகிறது, பல தசாப்தங்களாக அனைத்து முஸ்லிம்களின் வீடுகளிலும் தேசிய முஸ்லிம் சேவை ஒலித்துள்ளது.

நோன்பு காலத்து நிகழ்ச்சிகள், முஸ்லிம்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் என அளப்பரிய சேவையை முஸ்லிம் சேவை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளது.

முஸ்லிம்களுக்கான தேசிய ஊடகமொன்றை இல்லாதொழிப்பது என்பது மிகக் கவலையான விடயமாகும்.

நன்றி: டெய்லி சிலோன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்