முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவை, 08 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்து, நீதிமன்றம் உத்தரவு

🕔 July 30, 2021

ஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 08 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்குகளைத் தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் மூவர் – உரிய ஆவணங்களை முன்வைக்காத காரணத்தினால், குறித்த வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது கடினமான விடயம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜராக அதன் உதவிப் பணிப்பாளர் அசித அன்டனி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழக்கை தொடர்ந்து நடத்தி செல்வது கடினமாயின் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு சரண குணவர்தன சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த நீதவான், லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 08 வழக்குகளில் இருந்தும் பிரதிவாதியான சரண குணவர்தனவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் தலைவராக 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் சரண குணவர்த்தன பதவி வகித்த காலம் தொடர்பில் மேற்படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தேசிய லொத்தர் சபையின் தலைவராக அவர் பதவி வகித்த போது 8.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில், சரண குணவர்த்தனவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்தமையை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை, அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை தேசிய லொத்தர் சபைக்கு அவர் திருப்பிக் கொடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்