பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

🕔 June 27, 2021

– வை எல் எஸ் ஹமீட் –

சில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன

இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196 அங்கத்தவர்களும் தெரிவுசெய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டபின், உடனடியாக ஏனைய 29 அங்கத்தவர்களையும் பங்கீடு செய்வதைப் பற்றிப் பேசுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அடிப்படையில் இந்த 29 ஆசனங்களையும் பங்கீடு செய்வது என்பது பற்றிப் பேசுகின்றது. (இது நமது தலைப்புக்கு முக்கியமில்லை)

தேசியப்பட்டியல் உறுப்பினராக யாரை நியமிப்பது?

அதன்பின் ஒரு கட்சி தனக்கு கிடைக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக பேசுகிறது.

அதாவது, ஒரு கட்சிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் உரித்தானால் தேர்தல் ஆணையாளர் (தற்போது ஆணைக்குழு) அக்கட்சியின் செயலாளருக்கு ஒரு வாரத்துள் தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டுமென அறிவித்தல் வழங்க வேண்டும். (அவ்வாறு நியமிக்கப்படுபவர் தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்டவராக அல்லது ஏதாவதொரு மாவட்டத் தேர்தல் நியமனப்பத்திரத்தில் பெயரிடப்பட்டவராக இருத்தல் வேண்டும்)

யாரை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக இவ்வளவுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்க்கும்போது இந்த இரண்டு பட்டியிலில் ஏதாவதொன்றில் உள்ளவரைத்தான் நியமிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, வெளியில் இருந்து ஒருவரை எவ்வாறு நியமிக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இங்கு சில விடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளன.

முதலாவது: இச்சரத்து தேர்தல் முடிந்தவுடன் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக குறிப்பிடுகின்றதே தவிர, பின்னர் வெற்றிடங்கள் ஏற்படும்போது அவ்வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக குறிப்பிடவில்லை. உதாரணமாக, மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி வெற்றிடமாகும்போது, அவ்விடத்தை எவ்வாறு நிரப்புவது? (பட்டியலில் அடுத்ததாக வாக்குப்பெற்றவர்) என்று சரத்து 99(13)(b) கூறுகின்றது.

அதே நேரம், அரசியல் அமைப்பில் தேசியப்பட்டியல் வெற்றிடம் நிரப்புவது தொடர்பாக குறிப்பிடாதபோதும் 1 ம் இலக்க, 1981ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 64(5) இல் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அவ்வாறு வெற்றிடம் ஏற்படும்போது தேர்தல் ஆணையாளர் தனது ‘கட்சியின் உறுப்பினர்’ ஒருவரை முன்மொழியுமாறு அக்கட்சியின் செயலாளரைக் கோரவேண்டும். அவ்வாறு முன்மொழியப்படுபவரை தேர்தல் ஆணையாளர் நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தவேண்டும்.

எனவே, இதன்பிரகாரம், முதல் தடவை தேசியப்பட்டியலுக்கான நியமனமானது, குறித்த இரண்டு பட்டியல்களில் ஒரு பட்டியலில் இருந்து செய்யப்படவேண்டும். அதன்பின் ஏதாவதோர் தேசியப்பட்டியல் வெற்றிடம் ஏற்பட்டால் கட்சியின் அங்கத்தவர் ஒருவரை நியமிக்க முடியும். அவரது பெயர் எந்தவொரு பட்டியலிலும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

இதனடிப்படையில்தான் இவ்வளவு காலமும் தேசியப்பட்டியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு வருகிறது.எனவே, பசில் ராஜபக்ஷவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சட்டத்தடை ஏதும் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்