புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார்

🕔 May 23, 2021

புத்தளம் நகர சபைத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு வயது 52 ஆகிறது.

தனது தோட்டக்காணிக்குச் சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக கே. ஏ. பாயிஸ் பதவி வகித்து வந்தார்.

பின்னர் ரஊப் ஹக்கீம் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் கட்சியிலிருந்து பாயிஸ் நீக்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பாயிஸ், மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் – கட்சியின் விருப்பத்துக்கு மாறாக, ஆளுந்தரப்புடன் இணைந்து கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வேறு கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசியல் பயணத்தை மேற்கொண்ட பாயிஸ், மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஒரு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்