தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து, கொவிட் நோயை குணப்படுத்தாது: சுகாதார அமைச்சு நியமித்த குழு தெரிவிப்பு

🕔 May 5, 2021

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர் தயாரித்த பாணி மருந்து, கொவிட் 19 நோய்க்கான நிவாரணத்தைக் கொண்டிருக்கவில்லை என, அந்த மருந்து குறித்து ஆய்வை மேற்கொண்ட விசேட குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பாணி மருந்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதையும் அந்தக் குழு நிராகரித்துள்ளது.

குறித்த பாணி மருந்து குறித்து ஆய்வை மேற்கொள்வதற்கு, மேற்படி விசேட குழுவை சுகாதார அமைச்சு நியமித்திருந்தது.

கொவிட் 19 முதலாவது அலை நாட்டில் ஏற்பட்டபோது, கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார எனும் நாட்டு வைத்தியர், கொவிட் 19 நோயை குணப்படுத்தக் கூடிய பாணி மருந்து ஒன்றை தான் தயாரித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சுகாதார வழிமுறைகளை மீறி, தனது பாணி மருந்தை – கேகாலையில் மக்களுக்கு அவர் விநியோகித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இந்த பாணி மருந்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உள்ளிட்டோர் அருந்திய போதும், பின்னர் அவர்கள் கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த பாணி மருந்து கொவிட் தொற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்பட்டதை அடுத்து, அதனை ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்தது.

அந்தக் குழுவின் முடிவு கிடைக்கும் வரை, தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, அந்த மருந்து கொவிட் தொற்றை குணப்படுத்தாது என, மேற்படி விசேட குழு அறிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: தம்மிக்க பண்டாரவின் பாணி மருந்து குடித்த ராஜாங்க அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்