ஈஸ்டர் தின தாக்குதல்: ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் முன்வைப்பு

🕔 May 3, 2021

ஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, 800 குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன் வைத்தார்.

மேற்படி இருவருக்கும் எதிரான வழக்குகளுக்காக, 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் இன்று முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

கொலை மற்றும் கொலை முயற்சிகள் ஆகிய குற்றங்களுக்காக மேற்படி இருவருக்கும் எதிராக இரண்டு தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈஸ்டர் குண்டு வெடிப்பைத் தடுப்பதில் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர் தோல்வியடைந்ததாகவும், கடுமையான தவறுகளை இழைத்தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் எனவும், சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தினத் தாக்குதல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகிய இருவரையும் சாடியிருந்தது.

உளவுத்துறை தகவல்களைப் பெற்ற போதிலும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, ஹேமசிறி பெனாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர் 2019 செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர்.

Comments