கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம்

🕔 April 18, 2021

துறைமுக நகரம் சீன காலணி என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகர் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பு இந்த நாட்டுக்கு சொந்தமானது என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுக நகர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிலப்பரப்பு உள்ளடக்கம் பற்றிய விரபங்கள் மற்றும் அதன் வரைபடம் என்பன பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நகரம் மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்துக்குச் சொந்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நகரத்தில் ஏதேனும் நிர்மானப் பணிகள் செய்ய நேரிட்டால், அதற்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளிடம் அனுமதி பெற்றுக்கொள்வதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதற்காகவே, பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நகரின் மூலம் புதிதாக 83,000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகருக்கு பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பூரண சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் அதில் தமக்கு 100 வீதம் நம்பிக்கை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினர் துறைமுக நகர் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

கடல் பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ள துறைமுக நகரமானது, சீன காலணித்துவப் பகுதியாக மாறவுள்ளதாகவும், அதற்கு தனிநாடொன்றுக்குரிய சிறப்பு வழங்கப்படவுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்