“கூச்சமின்றி ஹக்கீம் தெரிவித்த மடத்தனமான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்”: பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்

🕔 February 22, 2021

பொத்துவில் பிரதேச சபை குறித்தும், அந்த சபையின் தவிசாளர் ரஹீம் தொடர்பாகவும் ‘நியுஸ் பெஸ்ட்’ ஒளிபரப்பிய ‘நிவ்ஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை கண்டிப்பதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச். ரஹீம் தெரிவித்துள்ளார்.

‘நியுஸ் லைன்’ நேர்காணல் நிகழ்வில் பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “பொத்துவில் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர். அவர் இன்றும் கட்சியில் தான் இருக்கிறார். என்னோடு இன்றும் தொடர்பில் தான் உள்ளார். பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி முஸ்லிம் காங்கிரஸ் வசம்தான் இப்போதும் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் ரஹீம்;

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மேற்படி கருத்தை தான் வன்மையாக மறுப்பதாகவும், தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து – தான் முழுமையாக விலகி, றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மூலமாக இணைந்து, தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

“முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நான் இருந்த போது, கட்சித் தலைமையாலும் கட்சியின் முன்னாள் தவிசாளர் உள்ளிட்டோராலும் நிறையவே ஏமற்றப்பட்டும் துரோகத்தனங்களால் பலமுறை தோற்கடிக்கப்பட்டுமுள்ளேன்.

தவிசாளர் பதவியைத் தருவதாக எனக்கு வாக்குறுதியளித்து, நாணயம் சுண்டி – ரஊப் ஹக்கீம் அவர்களால் நான் ஏமாற்றப்பட்டவன்.

தவிசாளர் பதவியின் அரைவாசிக் காலத்தை அதாவது 02 வருடங்களை எனக்கு தருவதாக சொல்லி ஈற்றில் கட்சித் தலைமையால் கைகழுவப்பட்டவன் நான்.

பதவி என்பதை தாண்டி குர்ஆன், ஹதீஸை யாப்பாக கொண்ட கட்சி என்று நொடிக்கு நூறு தடவை மார்பு தட்டும் கட்சி, அமானிதங்களை நிறைவேற்ற தெரியாத தலைமையை கொண்டிருப்பது நகைப்பானது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நான் பயணித்த பின்னணி இவ்வாறிருக்க, எந்தக் கூச்சமும் இன்றி, மனசாட்சியின்றி ரஊப் ஹக்கீம் இப்படி பொதுவெளியில் கருத்து தெரிவித்திருப்பதானது மடமைத்தனமானதாகும். அவரின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் எனது அரசியல் பயணத்தை இனிமேல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு தொடர்ந்து, தலைவர் றிஷாட் பதியுதீனோடும், எமது நாடாமன்ற உறுப்பினர் முஷாரப்போடும் இணைந்து பொத்துவில் மண்ணுக்காகவும் கட்சிக்காகவும் தொண்டாற்றவுள்ளேன் என்பதை மீண்டுமொருமுறை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” என, தவிசாளர் ரஹீம் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக ரஹீம் தெரிவு; வியூகம் அமைத்தார் முஷாரப்: ஆட்சியை இழந்தது முஸ்லிம் காங்கிரஸ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்