தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில்

🕔 February 12, 2021

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தம் செய்வதற்கான காலம் எழுந்துள்ளதாக கூறிய அமைச்சர், இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திருமணத்துக்கான குறைந்த வயது 18 ஆக இருக்க வேண்டும், பெண்களும் காதி நீதிபதிகளாக கடமையாற்ற முடியும். முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யும்போது அவர்களது திருமண ஆவணத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த திருத்தம் தொடர்பாக ஆராய விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண சட்டத்தின்படி முஸ்லிம் பெண்கள் தமது அனுமதியின்றி திருமணம் செய்து வைக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தவறானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நடைமுறையில் அவ்வாறு இடம்பெறுவதில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் பல தனியார் மத சட்டங்கள் காணப்படுவதாகவும் அவ்வாறு இருக்கும் போது, ஒரே ஒரு மதச் சட்டத்தை மட்டுமே அகற்ற முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், முஸ்லிம் சட்டம் எதிர்காலத்தில் தேவைக்கேற்ப திருத்தப்படும் என்றும் – தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் எனக் கோரும் தனி நபர் பிரேரணையை அண்மையில் அத்துரலியே ரத்ன தேரர் சமர்ப்பித்திருந்த நிலையில், அது வர்த்தமானியிலும் பிரசுரக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்