45 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய, குகை ஓவியம் கண்டு பிடிப்பு

🕔 January 15, 2021

லகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்ட ஓவியம் தொல்லியல் நிபுணர்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பன்றி ஓவியம் 45,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த ஓவியத்தை ‘ஆச்ரே’ எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் இருப்பது சூலவேசி வார்டி எனும் காட்டுப் பன்றியாகும்.

இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

“இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்கள் விருப்பப்பட்ட ஓவியத்தை வரையும் அளவுக்கு, அவர்களிடம் எல்லா வகையான உபகரணங்கள் மற்றும் வரைவதற்கான திறன் இருந்தது” என ‘சயின்ஸ் அட்வான்செஸ்’ என்கிற சஞ்ஜிகையில் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான மேக்சிமே ஆபெர்ட் கூறுகிறார்.

இந்த ஓவியத்தின் மீது உருவான கால்சைட் என்கிற ஒரு வகையான தாது படிமத்தை பொருளின் பழமையைக் கண்டுபிடிக்கும் டேட்டிங் நிபுணரான ஆபெர்ட் கண்டுபிடித்தார். யுரேனியம் சீரிஸ் ஐசோடோப் டேடிங் முறையைப் பயன்படுத்தி அப்படிமத்தை சோதனை செய்து 45,500 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.

குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியம் குறைந்தது 45,500 ஆண்டுகாலம் பழமையானதாக இருக்கலாம். “ஓவியத்தின் மீது படிந்திருந்த கால்சைட் தாதூவின் பழமையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். எனவே, அவ்வோவியம் அதனை விட பழமைமையானதாக இருக்கலாம்” என்கிறார் ஆபெர்ட்.

136 சென்டிமீட்டர் நீளமும், 54 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ஓவியம், கொம்புகளைக் கொண்ட வார்டி ரக ஆண் பன்றியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

இந்த பன்றி ஓவியத்தின் மேல், பின்புறத்தில் இரண்டு கைகள் இருக்கின்றன. இந்த கைகள் வேறு இரண்டு பன்றிகளை நோக்கி இருக்கின்றன. ஆனால் அந்தப் பன்றி ஓவியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை.

“இந்தப் பன்றி மற்ற இரு வார்டி பன்றிகள் சண்டை போடுவது அல்லது பன்றிகள் தொடர்பு கொள்வதை கவனிப்பது போலிருக்கிறது” என்கிறார் இந்த ஆய்வறிக்கைகளை எழுதியவர்களில் ஒருவரான ஆடம் ப்ரும்.

இந்த கை ஓவியத்தை வரைவதற்கு, நிறமிகளைக் கொட்டுவதற்கு முன் ஓவியர்கள் தங்களுடைய கைகளை வைத்திருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஓவியத்தில் இருக்கும் எச்சிலை வைத்து, அவர்களின் மரபணு மாதிரிகளை எடுக்க முடியும் என ஆராய்ச்சியை மேற்கொண்ட குழு நம்புகிறது.

உலகிலேயே மிகப் பழமையான ஒரு உருவத்தைக் குறிப்பிடும் ஓவியமாக இது இருக்கலாம். ஆனால் இந்த பன்றி ஓவியம் உலகிலேயே மிகப் பழமையான ஓவியமல்ல.

தென்னாபிரிக்காவில் 73,000 ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்ட ஹேஷ்டேக் போன்ற ஒரு ஓவியம்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஓவியமென நம்பப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்