மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி; வெள்ளத்தில் மூழ்கின பல பிரதேசங்கள்

🕔 January 4, 2021

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

ட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் – கடும் மழை காரணமாக, அங்கு பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் 142.4 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய காத்தான்குடி பகுதியில் இடிமின்னல் தாக்கி 03 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இடிமின்னல் காரணமாக காத்தான்குடி பகுதியில் பல வீடுகளில் மின்சார சாதனங்கள் பழுதடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற கால நிலையினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கரணாகரன், மற்றும் மட்டக்களப்பு கல்லடி ராணுவ முகாம் கட்டளை தளபதி பிரிகேடியர் கேரணல் கமகே ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய சிறீதர் இவர்களை அழைத்துச் சென்று வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை காண்பித்தார்.

காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் 11767 குடும்பங்களைச் சேர்ந்த 39782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் காரணமாக காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments